உடையும் அதிமுக? ஓரங்கட்டப்படும் இபிஎஸ்? வேலுமணிக்கு பெருகும் ஆதரவு.. நடப்பது என்ன?
எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுசாமி என இரண்டு தரப்பாக அதிமுக உடைந்து நிற்பதாகவும், இதில் தற்போது அதிகப்படியான எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி பக்கம் நிற்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இந்த தேர்தலில் கிடைக்காமல் போனது. மேலும், இதுவரை இல்லாதவகையில், பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது தவெக தலைவர் விஜய், “இரண்டு பேருக்கு (திமுக - தவெக) இடையே மட்டுமே போட்டி” என்று கூறிய நிலையில், அதுவே தற்போது நிகழ்ந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், அதிமுகவின் எதிர்காலம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்காமல் போனது, அதேபோல திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தது அதுவும் கைகூடாமல் போனது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 30 எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்திலும், அதிமுக தொண்டர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இதற்கிடையே, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக்க சி.வி.சண்முகம் தரப்பு முன்மொழிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருக்கும் நிலையில், மீதமுள்ள 30 எம்எல்ஏகள் சி.வி.சண்முகம் தரப்புக்கு ஆதரவு எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுசாமி என இரண்டு தரப்பாக அதிமுக உடைந்து நிற்பதாகவும், இதில் தற்போது அதிகப்படியான எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி பக்கம் நிற்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், சட்டமன்றக் குழத் துணைத் தலைவராக ஹரியையும், சட்டமன்றக் கொறடவாக விஜபாஸ்கரையும், சட்டமன்றச் செயலாளராக ஆர்.காமராஜையும் நியமிக்கக் கோரி தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் சி.வி.சண்முகம் தலைமையிலான 30 பேர் கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் மனு வழங்கியுள்ளனர். முன்னதாக 17 பேர் கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டி ஆதரவுக் கடிதத்தை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அடைந்துவரும் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் சிவி சண்முகம் தரப்பில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, இந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், அவரை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கையெழுத்துப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சட்டவிதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. தவிர, அவர்களே உண்மையான கட்சியாக அறிவிக்கப்படும். அதிமுகவில் ஏற்பட்டு உள்ள இந்த பிரச்னை, இன்னும் ஒரிரு நாளில் மிகப்பெரும் பூகம்பமாக வெடிக்கும் என்றும் ஓபிஎஸ்ஸைப்போல, இபிஎஸ்ஸும் ஓரங்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

