”மறந்துவிட்டீர்களா CM Sir?” முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!
திமுக தொடர்பாக முதல்வர் விஜய் வைத்த விமர்சனத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக பெரும்பான்மை பெறவில்லை என சட்டமன்றத்தில் திமுக முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் விஜய், திமுக தனித்து பெற்ற வாக்குகளைவிட, தவெக 52 லட்சத்து 97ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுகவின் 24 சதவீத வாக்குகளைவிட, 35 சதவீத வாக்குகள் பெற்று தவெக முன்னிலையில் இருப்பதாகவும், 76 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் திமுக எனவும் புள்ளிவிவரங்களுடன் அவர் சாடியுள்ளார்.
அதேபோல், தவெக ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, திமுக செய்த வேலைகள் அம்பலமான கதையை அனைவரும் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தவெக வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதை, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார். திமுகவின் கடன் சுமை, அரசியல் நாகரிகம் குறித்து முதல்வர் விஜய் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டதாக, 15 திமுக அமைச்சர்களின் தோல்வியையும் சுட்டிக்காட்டி, தோல்வி பயத்தில் திமுக டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்றும் சாடியுள்ளார். மேலும், அண்ணாவின் கனிவுடனும், அரசியல் நாகரிகத்துடனும் தவெக அரசு என்றும் செயல்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த விமர்மசத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். அவர், “எங்களது வாக்கு விழுக்காடு தெரிந்ததால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில்அமர்ந்திருக்கிறோம்” தெரிவித்துள்ளார். மேலும் அவர், பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடுஆளுநர் மாளிகைக்கு தினமும் போகவில்லை என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
மேலும், எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வராகியுள்ளதை மறந்துவிட்டீர்களா சி.எம். சார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 2006 திமுக ஆட்சி, குதிரை பேரத்தால் அமைந்தது அல்ல என சுட்டிக் காட்டியுள்ள அவர், திராவிட மாடல் திட்டங்களை தவெக அரசை ஏற்கவைத்ததே எங்களது வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

