Udhayanidhi Stalin speech on TVK confidence vote
Udhayanidhi Stalinx page

”Change-க்கு பின்னால் Exchange; ’புஷ்பா’ பாணியில் புதிய ஆட்சி..” - தவெகவை தாக்கிய உதயநிதி!

இறுதியில் 144 பேரின் ஆதரவு பெற்று தவெக ஆட்சியைத் தக்கவைத்தது.
Published on

விஜயின் தவெக ஆட்சி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு தீர்மானத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

விஜயின் தவெக ஆட்சி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள், சிபிஐ, சிபிஐஎம், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இறுதியில் 144 பேரின் ஆதரவு பெற்று தவெக ஆட்சியைத் தக்கவைத்தது. முன்னதாக, வாக்கெடுப்பு தீர்மானத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி, மீது எங்களுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்ற எங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுக்கவே அவர்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். இன்னும் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார்கள். மதச்சார்பற்ற கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், என்டிஏ கூட்டணியில் நின்றவரை அவரது கட்சித் தலைவருக்கு தெரியாமலேயே உங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ளீர்கள்” என அமமுக மூலம் வெற்றிபெற்ற மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை மறைமுகமாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரசாரத்தில் 'மற்றும் சிலர்' கட்சிகள் எனக் கூறிய கட்சியின் சிலரின் ஆதரவுடன் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார் முதல்வர் விஜய். அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்க விரும்புகிறார். பெருபான்மையும் நேர்மையும் இல்லாத அரசு எப்படி நல்லாட்சி தரும். தேர்தலில் ஊழல் சக்தி எனக் கூறினீர்கள். தற்போது ஊழல் சக்தியுடன் சேர்ந்திருக்கும் உங்கள் ஆட்சி என்ன சக்தி என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள். உங்கள் அரசு எத்தனை நாள் நீடிக்கும் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது” என அதிமுகவின் உட்கட்சிப் பிரச்னையையும் சுட்டிக் காட்டினார்.

Udhayanidhi Stalin speech on TVK confidence vote
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி.. பெருகிய ஆதரவு.. தொடரும் விஜய் ஆட்சி!

மேலும் பேசிய் அவர், “திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15ஆம் தேதி உரிமைத்தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 7ஆம் தேதி செல்ல வேண்டிய தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை.. முக்கியமாக காலை உணவு திட்டம், அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதுதவிர, நீங்கள் சொன்ன திட்டங்களும் அடக்கம். ஆட்சியமைக்கும் முன்பு, Change Change என்று சொன்னீங்க. ஆனால் அதுக்குப் பின்னால் Exchange இருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். கூவத்தூரை மிஞ்சுகிற அளவிற்கு தவெக ஆட்சியில் அவலங்கள் நடைபெற்று வருகின்றன. எங்களிடம் எம்எல்ஏக்களை கடன் பெற்று ஆட்சி நடத்தும் முதலமைச்சர் விஜய், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என தெரிந்தவுடன் வளர்ச்சிக்காக எங்கள் ஆட்சியில் பெற்ற கடனை காரணம் காட்டி மக்களை திசைதிருப்ப முயல்கிறார்.

உங்களுக்கு வாக்களித்த மக்களே, இன்று நடந்தவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, 'பெரிய தவறு செய்துவிட்டோமோ' என வருந்த தொடங்கியுள்ளனர். புதுமையான ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆனால், இன்றைக்கு ’புஷ்பா’ திரைப்பட பாணியில்தான் புதிய அரசின் ஆட்சி நடக்கிறது” என மறைமுகமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டுக்கு ஷோபா சென்றதையும் அதன் பின்பே முதல்வர் சென்றதையும் உதயநிதி குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “இன்ஸ்டாகிராமில் ரீல் ஆட்சி இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு எண்ணிக்கை குறைந்து நீங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அதன் பிறகாவது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக செயல்படுங்கள். ஆகவே நாங்கள் இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறிவிட்டு தங்கள் எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.

Udhayanidhi Stalin speech on TVK confidence vote
”முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார்?” - சட்டப் பேரவையில் முதல்வரிடம் கொந்தளித்த பிரேமலதா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com