திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி? ஸ்டாலினைச் சந்தித்த செல்வப்பெருந்தகை.. நடந்தது என்ன?
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான் ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்றுவரும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற குரலைத் தொடர்ந்து எழுப்பி வரும் காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலிலுக்கு 39 தொகுதிகளும் 2 மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுகவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவ்வளவு தொகுதிகள் கொடுக்கமுடியாது என திமுக மறுத்திருக்கும் நிலையில், 25 +1 என்ற தொகுதிகளை கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என வலியுறுத்தி வருவதாகவும், நேற்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், தவெகவுடன் கூட்டணி வைப்பதால் வரும் சாதக பாதகங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நேற்று, ஹைதராபத்தில் ராகுல் காந்தியை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இடையே ரகசிய சந்திப்பு நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. அதேசமயம், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தில் ’சகோதரர்’ என்ற வார்த்தையை ராகுல்காந்தி தவிர்த்திருப்பது திமுக-காங்கிரஸ் இடையேயான முரண்பாடு அதிகரித்திருப்பதாக பார்க்கப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் - திமுக கூட்டணி முடிவுக்கு வருகிறதா என பேசப்பட்டு வந்த நிலையில்தான், கூட்டணியை உறுதி செய்ய இன்று (மார்ச் 3) வரை காங்கிரஸுக்கு திமுக கெடு விடுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை சென்று அவரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இருவரும் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில், கூட்டணி குறித்தும் தொகுதிப்பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகையிடம், திமுக கெடு விதித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்துப் பேசிய அவர், ”இன்று நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி உறுதியாக இருக்கிறது. திமுக காங்கிரஸுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; அதன்பிறகு எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

