\
DMK Petition Withdrawn on Karur Row
Cm Vijay PT

கரூர் வழக்கு | உச்சநீதிமன்றம் கண்டனம்.. மனுவைத் திரும்பப் பெற்ற திமுக!

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருக்கையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பொது பேச்சுக்கு தடை கோரிய திமுக மனுவை, கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
Published on
Summary

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை எதிர்த்து, சிபிஐ விசாரணை முடியும்வரை முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் பொதுவெளியில் பேசத் தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுத் தாக்கல் செய்தது. ஆனால், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக் கண்டித்த நீதிமன்றம், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது.

செய்தியாளர் ; m. மீரா

அண்மையில் நடைபெற்ற தவெக இணைப்பு விழா ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு உள்ளது. அதை முடிக்காமல் விடமாட்டோம். நெரிசலை உருவாக்கி மக்களைக் கொன்று குவித்தீர்கள். அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்” என்று திமுகவை நேரடியாகக் குற்றம்சாட்டிப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு எதிராக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மிக அவசரமாக ஓர் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தார்.

Aadhav Arjuna
Aadhav Arjunaweb

கரூர் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ (CBI) விசாரித்து வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலுள்ள (Accused List) ஓர் அமைச்சரே பொதுவெளியில் இப்படிப் பேசுவது சட்டவிரோதமானது என்று திமுக தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும், திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்த விவகாரத்தை அவசரமாக முறையிட்டார். இந்த வழக்கில் முக்கியச் சாட்சிகளாக இருக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தவெக தலைவர்கள் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ள சூழலில், இத்தகைய பொது அறிக்கைகள், சாட்சிகளைக் கலைக்கவும், சிபிஐ விசாரணையின் நேர்மையைக் குலைக்கவும் வழிவகுக்கும் என திமுக வாதிட்டது. எனவே, சிபிஐ விசாரணை முடியும்வரை முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆதவ் அர்ஜுனா - ஆர்.எஸ். பாரதி
ஆதவ் அர்ஜுனா - ஆர்.எஸ். பாரதிPt web

இந்த விவகாரத்தை ஓர் அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், திமுகவின் மனு மீதான விசாரணையை இன்று (ஜூலை 7) நடத்துவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் விசாரணைக்கு வந்தபோது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாக தங்களது வாதத்தை முன்வைத்தார்.

இதைக் கேட்ட நீதிபதி விஸ்வநாதன், ’முதல்வரின் பேச்சை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று விருமபுகிறீர்களா? கருத்துச் சுதந்திரத்துக்கு தடை விதிக்கச் சொல்கிறீர்களா? முதலமைச்சரை குற்றவாளி என்று கூறி உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள்’ என்று திமுக வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது எப்படி வழக்கைப் பாதிக்கும் என்றும் திமுக பதிவுசெய்த வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார். இதனைத் தொடர்ந்து மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

DMK Petition Withdrawn on Karur Row
”திமுகவுக்கு வரச்சொல்லி 50 கோடி பேரம்” - ஆடியோவை வெளியிட்டார் தவெக எம்.எல்.ஏ. சரவணன்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com