”திமுகவுக்கு வரச்சொல்லி 50 கோடி பேரம்” - ஆடியோவை வெளியிட்டார் தவெக எம்.எல்.ஏ. சரவணன்!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு திருப்பங்களுடன் அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகளால் பரபரப்புடன் நகர்ந்து வருகிறது. முன்னதாக, ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத தமிழக வெற்றிக் கழகம், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், தற்போது வரை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, தங்களது ஆட்சியை நிலைத் தன்மைக்கு கொண்டு வரும் நோக்கில், முதல்வர் விஜய், பேரம் பேசி அதிமுக எம்.எல்.ஏ-களை ராஜினாமா செய்ய வைப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவதுடன் ஆளுநரிடமும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் தான், தங்களை திமுக பக்கம் இழுக்க அக்கட்சி சார்பில் பலர் பேரம் பேசி இருப்பதாக, தவெக எம்.எல்.ஏ-க்கள் குற்றஞ்சாட்டியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
ஏற்கனவே, தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், தவெக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் 35 கோடி பேரம் பேசியதாக, அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து அந்த வழக்கில் செந்தில் பாலஜி அவரது சகோதரர் அசோக்குமாரின் பெயரும் சேர்க்கப்பட்டது. அவர்களை விசாரிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில், அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தசூழலில் தான், திமுக தரப்பில் இருந்து பேரம் பேசியதாக மற்றொரு தவெக எம்.எல்.ஏ. ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் இன்று அளித்துள்ள பேட்டியில், ” ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து என்பது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டு சேர்ந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தன்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் என்ற போர்வையிலும், திமுகவை சேர்ந்த புரோக்கர்கள் பெயரிலும், 50 கோடி வரை பேரம் பேசியிருக்கின்றனர். அவ்வாறு, இல்லை எனில், என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் விடுக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வாகனத்தில் வரும்போது ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது அதுவும் எனக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தான் அவர்கள் மிரட்டலுக்கு பணியாத காரணத்தினால் என்னை கொலை செய்யும் நோக்கில் அந்த லாரியை ஏ.வி விட்டார்களா என தெரியவில்லை” என தெரிவித்தார் மேலும் பல்வேறு சமூகப் பணிகளை ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்காக தான் செய்து வருவதாகவும் தொடர்ந்து நான் தமிழக வெற்றி கழகத்தில், முதல்வர் விஜய் கூறியபடி தொடர்ந்து மக்கள் சேவையில் பணியாற்றுவேன் என தெரிவித்தார். தொடர்ந்து, பேரம் பேசியது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் தன்னை திமுகவினர் திமுகவில் இணைய சொல்லி எதிர் பேரம் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
