மக்களவை தேர்தல்|”பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை; அப்படியொரு விபத்து நடந்தால்.." - கனிமொழி எச்சரிக்கை

இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இந்த தேர்தல் நிச்சயமாக ”பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன் இதுதான் இந்தியாவுடைய கடைசி தேர்தல்.” - கனிமொழி கருணாநிதி
கனிமொழி
கனிமொழிPT

இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று (04/04/2024) விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் பரப்புரை மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கனிமொழி
மக்களவை தேர்தல் | கோவையில் 3 இயந்திரங்கள், 37 சின்னங்கள்... ஆனாலும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு?

விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், நிதித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.ஆர். சீனிவாசன், முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பரப்புரையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, "இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் வெற்றி உறுதி என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தல்களையும் போல இல்லை. யார் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தல் இல்லை. யார் ஆட்சியில் இருக்க கூடாது, யார் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை தாண்டி இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இந்த தேர்தல் நிச்சயமாக பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன் இதுதான் இந்தியாவுடைய கடைசி தேர்தல்.

அதன் பிறகு தேர்தல் நடக்காது, சர்வாதிகாரம் மட்டும்தான் தலை விரித்தாடும். நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், எத்தனையோ முறை பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து பலமுறை இடைநீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து அதானி விஷயத்தைப் பேசியதை தொடர்ந்து, அவரின் பதவியை நீக்கி வழக்குப் போட்டு நாடாளுமன்றத்துக்கு வர முடியாமல் செய்தார்கள். அதன் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்று தான் அவரால் மறுபடியும் பாராளுமன்றத்திற்கு வர முடிந்தது.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருக்கிறார்கள். தேர்தலில் அவர்களுக்கு அந்த பணம் பயன்படக்கூடாது என்பதற்காக. இரண்டு முதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், ஒரு துணை முதலமைச்சர் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சிறையில் இருக்கிறார். இவர்கள் எல்லாம் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக தான். அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் வழக்கு, கிட்டத்தட்ட பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட வழக்கு கிட்டத்தட்ட 80 சதவீதம் எதிர்க்கட்சிகள் மேல் தான்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய இடத்தை புடிங்கிவிடலாம், கேள்வி கேட்டால் சிறையில் அடைக்கப்படலாம், வழக்கு உங்கள் மீது பாயும். ஒரு சட்டம் வருகிறது என்றால் அதை எதிர்த்துப் போராடினால் வழக்கு வரும், சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

தமிழ்நாட்டைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிக்காது. நமக்கு வர வேண்டிய நிதியும் வராது. நாம் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் 26 பைசா தமிழ்நாட்டிற்கு. மழை, வெள்ளம் வந்தால் நிவாரணம் கூட வராது, எந்த திட்டமும் வராது. நம் கஷ்டப்பட்டபோது பிரதமர் மோடி வந்து எட்டிப் பார்த்தாரா? ஒருமுறை கூட வரவில்லை. ஆனால் இப்போது தமிழ்நாட்டைச் சுற்று சுற்றி வருகிறார். அடுத்த வாரம் கூட நான்கு நாட்கள் வருகிறார். ஆனால், தமிழ்நாடு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கனிமொழி
மக்களவை தேர்தல் 2024 | “சனாதனத்திற்கு எதிராக பேசுவோரை காங்கிரஸ் கண்டிக்கவில்லை” - கௌரவ் வல்லப்

இங்கே ஒரு ஆளுநர் இருக்கிறார். எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கனார், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 75 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தர். நாம் ஆட்சி பொறுப்பேற்று உடன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டது. இவர் யார் நம் மாநிலத்திற்குத் தமிழகம் என வைக்க கூறுவதற்கு, இவர் அதிகாரியாக இருந்தவரா?.

இன்னொரு அதிகாரி வேறு உள்ளார் அண்ணாமலை. என் மண் என் மக்கள் என்று சொல்கிறார், ஆனால் கர்நாடகாவில் இருந்தபோது நான் தமிழன் இல்லை நான் கன்னடகாரன் கடைசி மூச்சு இருக்கு வரை என்று சொன்னவர் கோவையில் நிற்கிறார், கர்நாடகாவில் எங்காவது நின்று இருக்க வேண்டியது தானே. நாம் போராடிப் பெற்ற தமிழ்நாடு என்ற பெயரையே தமிழகம் என்று சொல்கிறார். தமிழகம் சொல்ல வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்,? எங்களுக்குச் சொல்லித் தர உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.?

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் எனக் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை நாம ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும், நம்மைப் போலக் காங்கிரஸ் கட்சியும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

தமிழ் பேசத்தெரியவில்லை எனப் பிரதமர் வருத்தப்படுகிறார். நம்மை ஹிந்தி படியுங்கள் என்கிறார்கள், அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் ஒரு தமிழாசிரியரை உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

நம்முடைய ஆட்சி வந்தவுடன் உங்களுக்குக் கொடுத்த எல்லா வாக்குறுதியும், மகளிர் உரிமை பேருந்து பயணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம். கேஸ் விலை 500 ரூபாய் என்று குறைப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். கைவிரலைப் பிரித்தால் உதயசூரியன், சேர்த்தால் காங்கிரஸ் சின்னம்.

கனிமொழி
மக்களவை தேர்தல் 2024 | மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தப் பகுதியில் உள்ள அனைகுட்டம் அணையில் மதகுகள் பழுதுபார்க்க 29 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் 414 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்டு குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசின் சார்பில் வியாபாரிகள் நலனுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சேஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனா நதியின் குறுக்கே 5 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, மேலும் அர்ஜுனா நதியின் நீர்வழி பாதையில் உள்ள முத்துலிங்கபுரம் 10 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. நாம் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை ரூ. 500 ஆகவும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com