கரூர் துயரம் | "பலர் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்" இயக்குநர் ரத்னகுமார் வேதனை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.. ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியைத்தான் உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன. இன்றும் கரூரில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த நபருக்கு செய்யப்பட்ட சிபிஆர் சிகிச்சையின் வீடியோ மற்றும் அந்த நபரை தோளில் தூக்கிகொண்டு செல்லும் வீடியோ என பல புதிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன..
இந்நிலையில் இது குறித்து, இயக்குநரும், திரைக்கதை ஆசிரியர்ய்மான ரத்னகுமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதில், ”கரூர் துயர சம்பவத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பொதுமக்களால் எடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் புதிய வீடியோக்கள் வெளியாகி, என் இதயத்தை உடைக்கின்றன. அதன் பின்னர் வரும் நேர்காணல்களும் வீடியோக்களும், மனதை பதற வைக்கின்றன.. இன்று பலர் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். இந்த பெரும் அதிர்ச்சியிலிருந்து விலகி, மன அமைதியைப் பெற ஆஃப்லைனுக்குச் செல்கிறேன். நன்றி” எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேயாத மான் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார்.. சந்தானம் நடிப்பில் வெளியான குலுகுலு, அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் மட்டுமின்றி பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.. மாஸ்டர், விக்ரம் படங்களில் லோகேஷ் கனகராஜ் டீமில் இணைந்து பணியாற்றிய வரும் ரத்னகுமார் லியோ படத்திலும் வேலை செய்துள்ளார். அத்துடன் ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.