“சிம்புதான் தன்னை ஒதுக்கி வைத்துள்ளாரே தவிர ரசிகர்கள் யாரும் வெறுக்கவில்லை” - இயக்குநர் அமீர்
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை காளவாசல் குரு தியேட்டரில், தக் லைஃப் படத்தை காண ரசிகர்களுடன் இயக்குனர் அமீர் வருகை தந்தார். முன்னதாக கமல்ஹாசனின் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினருடன் கேக் வெட்டி தக் லைஃப் திரைப்படம் வெளியானதை இயக்குனர் அமீர் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமீர் பேசுகையில்...
“வெற்றி தோல்வி என்பதை வைத்து ஒரு திரைப்படத்துக்குள் செல்ல முடியாது. இதை ஒரு படமாகதான் பார்க்க போகிறேன். கமல் என்னும் ஒரு மாபெரும் கலைஞன், மணிரத்னம் எனும் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்ப வைத்த மிகப்பெரும் ஞானி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், இளைஞர்களின் நாயகன் சிம்பு சேர்ந்துள்ளனர். 500 கோடி, ஆயிரம் கோடி வசூல் செய்கிறதா என்ற சீப்பான விளம்பரத்தை தேடவில்லை. இந்த படம் என்னை ஈர்க்கிறதா என்பதைத்தான் பார்க்கப் போகிறேன்.
தக் லைஃப் என்பது இன்றைக்கு இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. மீண்டும் பழையபடி சண்டியர் என இழுத்து வர வேண்டாம். தக் லைஃப் தலைப்பு படத்திற்கு எந்த அளவிற்கு பொருத்தமாக உள்ளது என்பதை படம் பார்த்த பின்புதான் சொல்ல முடியும். சிம்பு எப்போதுமே ஆட்டத்தில்தான் உள்ளார். சிம்பு தான் தன்னை ஒதுக்கி வைத்துள்ளாரே தவிர ரசிகர்கள் யாரும் சிம்புவை வெறுக்கவில்லை.
என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே படத்திற்கு மணிரத்னமும், கமல் சாரும் வந்தனர். நாயகன் படத்தை எப்படி கல்லூரி காலத்தில் ஒரு ரசிகனாக பார்க்க முதல் நாள் வந்தேனோ அதுபோல தக் லைஃப் படத்தை ஒரு ரசிகனாக பார்க்க வந்துள்ளேன். கன்னட மொழி பிரச்னை தேவையில்லாத அரசியல். கமல் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை. திராவிட குடும்பத்தில் உள்ள மொழிதான் என பேசினார். அது கன்னட மக்களாலும், சிவராஜ் குடும்பத்தினராலும் சரியாக புரிந்து கொள்ளப்பட்டது.
அரசியல் செய்ய வேண்டும் என நினைத்த சின்ன சின்ன அமைப்புகள் இதை பெரிதுபடுத்தி விட்டார்கள். கர்நாடகாவில் மிகப்பெரிய சோகம் நடந்துவிட்டது. எனவே அதை மன்னிக்கதான் வேண்டும். தற்போது மொழி விவகாரத்தை பேசுவது சரியாக இருக்காது. முன்பெல்லாம் இவர்தான் நடிக்க வேண்டும் என்று இருந்தது. இப்போது எல்லோரும் நடிக்கிறார்கள். சூரி கதாநாயகனாகவும், பலர் கதைநாயகனாக நடிக்கிறார்கள் இதையெல்லாம் வரவேற்க வேண்டும்” என்று இயக்குநர் அமீர் பேசினார்.