கரைக்கு வரும் முன்னரே புயல் வலுவிழக்க வாய்ப்பு.. ஆனாலும், மழை குறையாதா? காரணம் என்ன?
13 கிமீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் வங்கக்கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் கரையைக் கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கான காரணம் குறித்தும் இன்னும் விளக்கப்படவில்லை.
அதேநேரம், கரையைக் கடக்கும் இடத்தை வானிலை ஆய்வு மையம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புயல் வரும் பாதையைத்தான் உறுதி செய்து சொல்லியுள்ளார்களே அன்றி, அது கரையைக் கடக்கும் இடத்தை இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை.
30 ஆம் தேதி வரை புயலாகவே இருக்கும் நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இப்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதன்பின்னர் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.