புதுச்சேரி சிறுமி வன்கொடுமை வழக்கு.. கைதான கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு!
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 5ஆம் வகுப்பு சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 500 பக்க குற்றப்பத்திரிகை, சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடந்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கருணாஸை குற்றவாளி என இன்று உறுதிப்படுத்தியது.
புதுச்சேரியில் கடந்த 2024 மார்ச் 2ஆம் தேதி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 5ஆம் வகுப்பு சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானர். போலீசாரின் 2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார்.சிறுமி கொலை வழக்கை எஸ்.பி. கலைவாணன் ஐபிஎஸ் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையை நடத்தியது.
பலியான சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் என்ற இளைஞரும் மற்றும் விவேகானந்தன் என்ற முதியவரும் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பத்தின் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த வழக்கனாது புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுமதி தலைமையில் நடைபெற்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரி இருந்தார்.
இந்த நிலையில் வழக்கு நடைபெற்ற போதே சிறையில் இருந்த குற்றவாளி விவேகானந்தன் 2024-ல் செப்டம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது கருணாஸ் மட்டுமே உள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்த நிலையில், பல்வேறு விதமான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் புதுச்சேரி சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கருணாஸ் தான் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. மேலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கருணாஸுக்கு மே 5இல் தண்டனை விவரம் அறிவிக்கவிருக்கிறது.

