"அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.."! - புகாருக்கு இடையே மாணிக்கம் தாகூர் பதிவு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. மாணிக்கம் தாகூர், 'அச்சம் இல்லை' என பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால், திமுக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என அறிவித்திருந்தாலும், காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, அக்கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பொதுவெளிகளில் கூட்டணி ஆட்சி என்றக் கோரிக்கையை தொடர்ந்து கூறிவருகிறார். சமீபத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசியிருந்த அவர், பல அமைச்சர் காங்கிரஸை சாதரணமாக பேசுகின்றனர். காங்கிரசுக்கு தன்மானம் தான் முக்கியம். மரியாதை கிடைக்காவிட்டால் திருப்பி அடிப்போம். காங்கிரஸ் கேட்பதெல்லாம் மரியாதையைத் தான் என பேசியிருந்தார். மேலும் இக்கூட்டத்தில் மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்தை மீண்டும் பேசியது பேசுபொருளாக மாறியது.
அச்சமில்லை.. அச்சமில்லை..
இந்தசூழலில் தான் தமிழக காங்கிரஸாரின் சர்ச்சை பேச்சு குறித்து கார்கேவிடம் புகார் அறிக்கை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். மேலும் பிரச்சினையை அகில இந்திய தலைமை சரி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மாணிக்கம் தாகூர், “அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.. அச்சமென்பது இல்லையே” என்ற பாரதியாரின் வரிகளை பதிவிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தால் திமுக - காங்கிரஸ் இடையே சமீபகாலமாக தொடர் முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில், தொகுதிப் பங்கீட்டுக்கான குழு அமைக்காமலேயே திமுக இருந்து வருகிறது.

