“அன்புமணிக்கு அதிகாரம் இல்லை” - நிர்வாகிகள் நியமன விவகாரம்.. பாமகவில் முற்றுகிறதா மோதல்?
பாமகவில் தன்னுடன் இருப்பவர்களே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏ அருளை கட்சியின் இணைப் பொதுச்செயலளராக ராமதாஸ் அறிவித்தார். இதையடுத்து அவரது மாவட்டப்பொறுப்பை பறித்துள்ளார் அன்புமணி.
தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ அருளை, கட்சியின் இணைப்பொதுச் செயலாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். கூட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், கட்சியை நடத்தி வரும் தானே தலைவர் என்பதால் தனக்கே முழு அதிகாரம் உள்ளதாக கூறினார். தன்னுடன் இருப்பவர்களே தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ அருள், அன்புமணி நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க தாம் மருத்துவமனை செல்லவில்லை என்றும், உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அன்புமணிக்கு அதிகாரம் இல்லை
அருளை கட்சியின் இணைப்பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்த நிலையில் அவர் வகித்த சேலம் மாநகர் மாவட்டச்செயலாளர் பொறுப்பில், சரவணன் என்பவரை நியமிப்பதாக அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அருள், “பாமகவின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் என்னை பாமகவின் இணைப் பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார். கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கோ நீக்குவதற்கோ மருத்துவர் ராமதாஸுக்கே அதிகாரம் இருக்கிறது. செயல்தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸுக்கு இந்த அதிகாரம் இல்லை. அன்புமணி ராமதாஸ்தான் பாமகவின் எதிர்காலம்.. பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் ராமதாஸால் முன்னிறுத்தப்படுகிறவர். ஆனால், அன்புமணி ராமதாஸ் இன்று பாமகவின் செயல்தலைவராக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
நிறுவனர் ராமதாஸ் நியமிக்கும் நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும், பதவி பறிப்பதுமாக இருவருக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.