”5 நிமிடம் பேசியதற்கே..” - பேரவையில் திமுகவைக் கடுமையாகச் சாடிய முதல்வர் விஜய்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்துக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், திமுக கட்சி மீதான நிதி குற்றச்சாட்டுகள், கூட்டணிக் கட்சிகள் மீது பரப்பப்படும் அவதூறுகள், சமூக நீதி, பட்டியலின சமூகத்தினர் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவிகள் குறித்து விரிவாக உரையாற்றினார். ஊழல் செய்ய மாட்டோம், செய்ய விடமாட்டோம், செய்தவர்களையும் விடமாட்டோம் என எச்சரித்தார்.
செய்தியாள்ர் ; m.மீரா
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்ற நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “இங்கிருபோர் நம்மீது அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் தயவால்தான் நமது ஆட்சி நடைபெறுகிறது எனச் சொல்கின்றனர். மக்களின் தயவால்தான் நமது ஆட்சி நடத்துகிறோம். கூட்டணிக் கட்சிகளை நாங்கள்தான் அனுப்பிவைத்தோம் எனச் சொல்கிறார்கள், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள்?
’சமூக நீதி, சமூக நீதிஅரசு’ என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். பட்டியலின சமூகத்தினருக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? தவெக அரசில் 8 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளோம். எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்? தவெகவில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளோம். மக்களுக்கு எல்லாம் தெரியும். தெளிவாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை அவமானபடுத்தவே தங்கள் அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்துகிறார்கள். எம்ஜிஆர் வெற்றிபெற்றபோதும் இப்படியேதான் பேசினார்கள். இபோதும் அப்படியேதான் பேசி வருகிறார்கள். 50 ஆண்டுகளாக ஒரே டெக்னிக்கை பின்பற்றுகிறார்கள். காலம் மாறிவிட்டது. ’பேசு பேசு’ என்று சொல்கிறார்கள். 5 நிமிடம் பேசியதற்கு கொளத்தூர் ஆட்டம் கண்டது.
சட்டப்பேரவையில் தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது குறித்து சர்ச்சை கிளப்பி வருகிறார்கள். கலைஞர் படம் திறப்பின்போது 2ஆவதாகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
பதவியேற்ற அன்றே நிதிநிலை குறித்து சிறிது அவகாசம் கேட்டேன். நான் வேறு எதற்காகவோ அவகாசம் கேட்டதாக அவதூறு பேசுகிறார்கள். கட்சி நிதி என்ற பெயரில் டாஸ்மாக்கில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஷோபா செட், பர்னிச்சர் பிஸினஸ் எல்லாம் வெளியே பண்ணுங்கள். சட்டசபையில் வேண்டாம். ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்ய விடமாட்டோம், ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம்” என்று முதலமைச்சர் கூறினார்.

