முதல்வர் விஜய் நாளை திருச்சி பயணம்.. நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெக தனிப் பெருங் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், பெரம்பூரில் 1,20,365 வாக்குகளும் , திருச்சி கிழக்கில் 91,381 வாக்குகளும் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். இந்தசூழலில் தான், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கிறார் முதல்வர் விஜய்.
திராவிட கட்சிகளுக்கு திருப்புமுனை மாவட்டமாக திருச்சி பார்க்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி கிழக்கு உட்பட மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 6-ல் தவெக இம்முறை வென்றிருக்கிறது. இந்தசூழலில் தான், திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்வர் விஜய் நாளை திருச்சி செல்கிறார். முதல்வராக பதவியேற்றப்பின் முதல்வர் விஜயின் முதல் திருச்சி பயணம் இதுவாகும்.
அதன்படி, நாளை மாலை தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து, திருச்சி - புதுக்கோட்டை டி.வி.எஸ். டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைகிறார். அதன்பின், அங்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார். இதற்காக, 15 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டம் அதிகம் வரும் என காவல்துறையினர் எதிர்பார்த்து சத்திரம் பேருந்து நிலையத்தை போக்குவரத்து மாற்றங்களை செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர். கட்சி தொடங்கிய பிறகு, தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து தொடங்கிய விஜய், தற்போது நன்றி அறிவிப்பு கூட்டத்தையும் திருச்சியில் இருந்தே தொடங்கியிருக்கிறார்.
முதல்வர் விஜயின் திருச்சி வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டுத் தலைவரும் தவெக முக்கிய நிர்வாகியுமான கு.ப. கிருஷ்ணன், ”தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகிறார். அவர்களை வரவேற்பதற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழக தோழர்கள் எல்லா இடங்களிலும் கட்சிக் கொடிகளை கையில் ஏந்தி, திரளாக நின்று வரவேற்பார்கள். அந்த இடம் சின்ன இடம். கல்லூரி மைதானத்திற்குச் செல்லும் பகுதி எல்லாமே திருச்சி கிழக்கு தொகுதி. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அவருடைய சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தசூழலில் தான், முதல்வராக பதவியேற்றப் பிறகு, விஜயின் முதல் திருச்சி பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

