தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 15-ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அரசுமுறைப்பயணமாக முதல்வர் லண்டன் சென்றதால், அன்றைய தினம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க முடியவில்லை. இந்தச்சூழலில் தான், செப்டம்பர் 28-ம் தேதி (இன்று) மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வர் ’தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து, மேடையின் கீழ் அமர்ந்திருந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரிடையாக மோதிரங்களை வழங்கினார்.
கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினத்திலிருந்து தற்போது வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் 102 மையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
