இயர்பட்ஸ் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கும் ஆய்வுகள்!!
உலகளவில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் பாடல்கள் மற்றும் ஆடியோக்களைக் கேட்பதால் காது கேளாமை அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் மற்றும் காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் அளித்துள்ள எச்சரிக்கையில், அதிக சத்தத்துடனும், நீண்ட நேரமும் இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துவது காதின் உட்பகுதியில் உள்ள உணர்வு செல்களைப் பாதித்து, மீட்க முடியாத நிரந்தர காது கேளாமை மற்றும் காதில் எந்நேரமும் இரைச்சல் கேட்கும் 'டினிடஸ்' பிரச்சினையை உருவாக்கும் எனக் கூறியுள்ளனர்.
இதனைத் தவிர்க்க, உலக சுகாதார நிறுவனம் 60/60 விதியைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறது. அதாவது, கருவிகளின் அதிகபட்ச ஒலியளவில் 60 சதவீதத்துக்கும் குறைவாகவே சத்தத்தை வைக்க வேண்டும்; மேலும், தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இடைவேளை எடுக்க வேண்டும். சத்தமான இடங்களில் இயர்பட்ஸின் சத்தத்தைக் கூட்டுவதைத் தவிர்த்து, காதுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். நாம் கேட்கும் பாடல்களை விட முக்கியமானது நம் காதுகள் என்பதை மறக்கக்கூடாது.

