”ஆபாச நதியா.. வன்ம நதியா ஓடுகிறது” - சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை!!
தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் (செப்டம்பர் 8) தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. இந்தச்சூழலில் தான், இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரையாற்றியிருக்கிறார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்” எனப் பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், ”எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது” எனப் பேசியிருந்தது பேசுபொருளாகியிருந்தது.
இந்தச்சூழலில் தான், பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் முதல்வர் விஜய் பதிலுரையாற்றியிருக்கிறார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றம் இன்று தொடங்கிய உடனே தங்களின் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து, திமுக சட்ட உறுப்பினர்கள் தலைநகரமா, கொலைநகரமா என்று முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால், தொடக்கத்திலேயே சட்டமன்றத்தில் சிறிது நேரம் அமளி நிலவியது.
தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், ”ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் சாலைகள் அமைப்பது மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பது மூலம் வளர்ச்சி வருவது இல்லை. ஒவ்வொரு குடிமகனும் பயமில்லாமல் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? என்பதில் தான் இருக்கிறது. காவல்துறை என்பது குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டும் இல்லை; காவல்துறை அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை என்பதே இந்த அரசின் நிலைபாடு.
அதேபோல, குற்றம் நடைபெற்று விட்டது என்பதாலே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என குறை கூற முடியாது. அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது இல்லை; குற்றம் உருவாகும் சூழலை கண்டறிந்து அதனை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு” எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் இந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. போதைப் பொருள் தடுப்பு படை தனியாக அமைக்கப்பட்டு இதுவரை போதை பொருள் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளைத் தான் வெட்டி இருக்கிறோம். ஆனால் போதை என்கிற முழு மரத்தை வேரோடும் நேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்; அதற்கு 100 நாட்கள் போதாது. தமிழ்நாட்டில் ஊழலை தடுப்பதிலும், லஞ்சத்தை தடுப்பதிலும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையாக செயல்பட வேண்டும்; ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டபூர்வ நடவடிக்கைகளை எந்த ஒரு தயக்கம் இல்லாமல் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொலை செய்யப்பட்டு ஒரு மாணவன் உயிர் இழப்பது என்பது மிகவும் வேதனையான சம்பவம் அந்த மாணவனை இழந்த பெற்றோரின் மன வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கெல்லாம் யார் காரணம், யார் மீது பழி போடலாம் என்று அரசியல் ரீதியாக சிந்திக்கும் எதிர்கட்சியினருக்கு இணையாக நானும் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்ற சம்பவங்களை டேட்டாவுடன் கூறிவிட்டு ஒதுங்க மனம் இடம் தரவில்லை. அது போன்ற கீழான அரசியலை நாம் செய்வதும் இல்லை, அதற்கான அவசியம் இல்லை எனப் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து, அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையோ பெண்களையோ தரம் தாழ்த்தி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதுடன், தமிழ்நாட்டில் ஆபாச நதியா வன்ம நதியா ஓடுகிறது; நம் வீட்டில் உள்ள தாய், அக்கா, தங்கச்சியாக இருப்பது அதே பெண்கள் தான் அதை மனதில் வைத்து பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “பொதுவெளிகளில் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்துப் பேசிய முதல்வர், ORTHO SURGEON போல சட்டசபைக்குக்குள் எலும்பை உடைப்பாரம். இன்னொருவர் சொல்கிறார் மக்களுக்கு நல்ல சாவு வராதாம். இதையெல்லாம் பார்த்துதான். இதை எல்லாம் பேசிப் பேசித்தான் சட்டசபையில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். இவ்வாறு சட்டமன்றத்தில் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார்.
முதல்வர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது எழுந்து நின்று திமுகவினர் முழக்கமிட்டனர்.
எனினும் தொடர்ந்து பேசிய முதல்வர், ”கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது. செய்யும் தவறை ஒழுங்கா முறையா செய்துள்ளார்கள். திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும். தப்பு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள். ஆனால் ஊழல் செய்யவில்லை என்று சொல்ல மாட்டார்கள் என விமர்சித்தார்.
மேலும், 1967 அண்ணா, 1977 எம்.ஜி.ஆர், 1983 NTR, 2026 விஜய்; இறைவனும் மக்களும் என்றும் நம் பக்கம் தான் நிற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
