\
CM vijay
CM vijayANI

டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. சோனியா விழா முதல் காவிரி வரை.. அமித் ஷாவை சந்திப்பாரா?

டெல்லி பயணத்தில் முதல்வர் விஜய் - காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?
Published on: 
Summary

தமிழக முதல்வர் விஜய் டெல்லி பயணத்தில் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், அமித் ஷாவை சந்திப்பாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக உள்ளது.

செய்தியாளர் - M.மீரா

தமிழக முதலமைச்சர் விஜய் நவம்பர் 16-ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி செல்லும் நிலையில், இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, முதல்வரின் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Sonai Gandhi's - Belonging a journey of love
Sonai Gandhi's - Belonging a journey of love ANI

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள *Belonging: A Journey of Love* என்ற சுயசரிதை நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய்யும் இதில் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) டெல்லி சென்ற தமிழக ஆளுநர் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலவரம் மற்றும் பொதுப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆளுநர் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மாநில அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லி செல்லும் முதல்வர் விஜய் அமித் ஷாவைச் சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

CM vijay
CM vijay ANI

மற்றொரு முக்கியப் பிரச்சினையாக இருப்பது காவிரி நதிநீர் விவகாரம். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சி செய்து வரும் நிலையில், அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி முதல்வர் விஜய் ஏற்கெனவே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி பயணத்தின்போது பிரதமர் மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து விஜய் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

CM vijay
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் ம*ணம்... காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!