\
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம்
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம்PT

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் ம*ணம்... காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

சேக்கானூரணி காவல் நிலையத்தில் அதிர்ச்சி: 42 வயது ஓட்டுநர் உயிரிழப்பு
Published on: 
Summary

மதுரை மாவட்டத்தில் 42 வயது சரக்கு வாகன ஓட்டுநர் காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் - M.மீரா

மதுரை மாவட்டம், சேக்கானூரணி காவல் நிலையத்தின் கழிவறையில் 42 வயது சரக்கு வாகன ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் டெலிவரி நிறுவனத்தில் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி தேவரத்திலிருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது, வாலந்தூர் கண்மாய் கரை அருகே அவரது வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் வாகனத்தில் இருந்த 60 மூட்டை பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

MAdurai
MAdurai PT

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வாலந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, தீ விபத்து தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக அவர் சேக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் காவல் நிலையத்தில் இருந்த பாலகிருஷ்ணன், சனிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் அங்குள்ள கழிவறையில் தூக்கிட்ட நிலையில் மயங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Madurai
MaduraiPT

இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் பதிவுகள் அனைத்தும் விசாரணைக்காக அதிகாரிகளால் பாதுகாப்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாலகிருஷ்ணன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம்
சபரிவர்மன் காவல் மரணம்.. மீண்டும் பேசப்படும் 1996 சம்பவம்... நாகர்கோவில் சிறையின் ரத்த வரலாறு