தமிழகத்தில் ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு.. முதல்வர் விஜய் உத்தரவு!!
தமிழ்நாட்டில் பெண் அரசுப் பணியாளர்களுக்கு தற்போது 365 நாட்கள் மகப்பேறு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆண் அரசு ஊழியர்களுக்கும் மகப்பேறு காலத்தின் போது, தந்தை வழி விடுப்பு வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்தச்சூழலில் தான், ஆண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறுகாலத்தில் 15 நாட்கள் விடுப்பு அளிக்கும் திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கு தந்தையர் மகப்பேறு கால விடுப்பு (Paternity Leave) வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.
குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழுந்தைக்கு மிக முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன் குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்கு அவசியமகிறது.
பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கு தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுவது (Paternity Leave) குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும். குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் 'தந்தையர் மகப்பேறுகால விடுப்பு" (Paternity Leave) வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ கொள்ளவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

