முக ஸ்டாலின் - மோடி
முக ஸ்டாலின் - மோடிweb

பிரதமரின் சர்ச்சை பேச்சு | திமுகவை விமர்சிப்பதாக நினைத்து தமிழ்நாட்டை அவமானப்படுத்துகிறதா பாஜக?

‘உழைக்கும் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்தி வருகின்றனர்’ என பிகார் பரப்புரையில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழர்களுக்கும், பிகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல் என விமர்சித்துள்ளார்.
Published on
Summary

பிகார் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி, பிகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டியதை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி கண்டித்துள்ள நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை "பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை" எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு மாநிலத்தில் தேர்தல் பரப்புரை நடந்தாலும் அதில் பாஜகவின் தலைவர்கள் தமிழ்நாட்டையும், திமுகவையும் சுட்டிக்காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை நேரடியாக எதிர்ப்பதற்கு இதனை அவர்கள் ஒரு யுக்தியாக கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களின் பேச்சை பேசுபொருளாக மாற்றினார்கள். ஒரு வகையில் இது இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியாக அமைந்தது. சனாதனம் குறித்த பேச்சு கூட கருத்தியல் ரீதியானது என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒடிசா தேர்தலின் போது தற்போது நடைபெற்று வரும் பிகார் தேர்தலின் போது தமிழ்நாட்டை வம்பிற்கு இழுப்பதுபோல் பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். அதாவது, திமுகவை விமர்சிப்பதாக நினைத்து தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் இருப்பது போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மோடி, அமித்ஷா பேச்சு - ஒடிசா தேர்தலில் என்ன நடந்தது?

ஒடிசாவில் கடந்த ஆண்டு பிரசாரம் செய்த பிரதமர் மோடி, “நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்று பேசியிருந்தார். ஒடிசாவின் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலின் விலை உயர்ந்த நகைகளை வைத்துள்ள கருவூலத்தின், உள் அறை சாவி 2018ல் காணாமல் போனதை சுட்டிக்காட்டி இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

அதேபோல் மற்றொரு பரப்புரையின் போது அமித்ஷா, 'தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆள அனுமதிக்கலாமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒடியா மொழி பேசும் இளைஞர் இம்மாநிலத்தை ஆட்சி செய்வார்'' என வி.கே.பாண்டியனை குறிவைத்து நேரடியாக தாக்கி பேசியிருந்தார். அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த வி.கே பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர், முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்தவர். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரசு பதவியை ராஜினமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்து அக்கட்சிக்காக தீவிரமாக பணியாற்றினார். ஆனால் , பாஜவினரின் தொடர் விமர்சனத்தால் வி.கே.பாண்டியன் ஒதுங்கிக் கொண்டார்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் பேச்சு நேரடியாக தமிழ்நாட்டை வம்பிற்கு இழுப்பது போன்று அப்பொழுது இருந்தது. அவர்களது பேச்சுக்கு தமிழ்நாட்டில் இருந்து கண்டனங்கள் எழுந்திருந்தது. அந்த வகையில் தற்போது பிகார் தேர்தலின் போது பிரதமர் மோடி பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பிரதமர் மோடி பேசியது என்ன?

பிகார் தேர்தல் சட்டப்பேரவையின் முதல் கட்டத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், பிகாரின் முசாபர்பூர் பகுதியில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாட்டில் வசித்துவரும் பிகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அதோடு, பிகார் மக்களை, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் அவதூறாக பேசுவதாக சாடி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ராகுலின் பேரணியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் பிகாருக்கு சென்று, காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது திமுகவை குறிவைக்கும் வகையில், பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிகார் பரப்புரையில் மோடி
பிகார் பரப்புரையில் மோடிஎக்ஸ்

இந்நிலையில், தான் பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டில் உள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்துவிடுவதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள அனைவருக்குமான, மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்துவிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

முக ஸ்டாலின் - மோடி
தெலங்கானா இடைத்தேர்தல் |அசாருதீனுக்கு அமைச்சர் பதவி? தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

மேலும், இதுபோன்ற பேச்சுகளால் தனது பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக்கூடாது என, ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஒடிசா - பிகார் என எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதாகவும், இந்து - முஸ்லீம்கள் இடையே பகையை வளர்ப்பது, தமிழர்கள் - பிகார் மக்கள் இடையே பகை உண்டாகும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்துமாறு பிரதமரையும் பாஜகவினரையும் வலியுறுத்துவதாக முதல்வர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை" - கனிமொழி கண்டனம் !

பிரதமர் மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று. தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் - மோடி
”அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன்; சர்ப்பரைசாக எல்லாமே நடக்கும்” - சசிகலா

"பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை" - அண்ணாமலை

உழைக்கும் பிகார் மக்களை திமுக அரசு துன்புறுத்துவதாக பிகார் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமர் கூறிய கருத்துக்கள் முழுக்க முழுக்க உண்மை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் "திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் - மோடி
பி.எம் ஸ்ரீ திட்டம் | விமர்சித்த பிரியங்கா காந்தி.. பதிலடி கொடுத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

பொருளாதார ரீதியாக முன்னேறி மாநிலங்களின் பட்டியலில் முதல் சில இடங்களில் தமிழ்நாடு இருந்து வருகிறது. சேவை மற்றும் தொழில்துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது தமிழ்நாடு. அந்த வகையில் தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலார்கள் அதிக அளவில் தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார்கள். என்னதான் வெளிமாநில தொழிலாளர்களின் வருகையால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை வைத்தாலும், இங்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. மகாராஷ்டிராவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இருந்த ஒருவித எதிர்ப்பு நிலை கூட இங்கு இல்லை. வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் இங்கே வந்து தங்கி வேலை செய்து பின்பு இங்கேயே தங்கியும் விடுகிறார்கள். இங்கு இருக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகள் அவர்களை கவர்ந்து விட்டது. இப்படியான சூழலில் பிரதமர் மோடியின் போது தேவையற்ற விவாதத்தை உருவாக்குகிறது.

அதாவது, பிரதமர் மோடி இப்படி பேசுவது திமுகவை தாண்டி மற்ற தமிழ் தேசியம் பேசும் கட்சிகளை தூண்டிவிடுவதுபோல் உள்ளது. இவர்கள் மற்றவர்கள் எதிர்வினை ஆற்றினால் தேவையில்லா விவாதங்களை கிளப்பும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களின் தொழிலாளர்களை இன்முகத்துடன் வரவேற்று வருகிறது. அதனை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com