தெலங்கானா இடைத்தேர்தல் |அசாருதீனுக்கு அமைச்சர் பதவி? தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
தெலங்கானாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் அரசு முடிவு செய்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் முக்கியமான ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியும் முன்னாள் கேப்டனும் தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீனை முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி தலைமையிலான மாநில அமைச்சரவையில் சேர்க்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையில் மூன்று காலியிடங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று இப்போது நிரப்பப்படுகிறது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள 3.98 லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 25% முஸ்லிம்கள் இருப்பதால், அவர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் அரசு, இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இன்று மதியம் 12.15 மணிக்கு அசாருதீன் அமைச்சராக பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரே அமைச்சராக அவர் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அசாருதீன் பதவியேற்றதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற மேலவை (MLC) அல்லது MLA ஆக வேண்டும். இல்லையெனில், அவர் தனது அமைச்சர் பதவியை இழப்பார். அதேநேரத்தில், ராஜ்பவனில் நிலுவையில் உள்ள ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் ஒரு எம்எல்சி பதவிக்கு அவரது பெயரை காங்கிரஸ் அரசு பரிந்துரைத்துள்ளது. அவர் டிசம்பர் 2023இல் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் உட்பட முந்தைய அனைத்து அரசாங்கங்களிலும் குறைந்தது ஒரு முஸ்லிம் அமைச்சர் இருந்துள்ளார். இந்த நிலையில், ஜூபிலி ஹில்ஸ் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சர் பதவியில் இல்லாதது குறித்து அதிருப்தி அடைந்ததாக அப்பகுதியில் நடைபெற்ற தொடர்ச்சியான கணக்கெடுப்பு அறிக்கைகள் தெரிவித்ததை அடுத்து, அசாருதீனின் பெயரை அங்கீகரித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, தெலங்கானாசட்டப்பேரவை மேலவை உறுப்பினராக அசாருதீனை நியமித்து, அவருக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பிட்ட சமூக வாக்குகளைப்பெற காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாரத ராஷ்டிர சமிதி (BRS)தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) சி. சுதர்சன் ரெட்டி, இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) வழிகாட்டுதல்களைக் கோரியுள்ளார்.


