
மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த எதிர்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் அதன் முதல் கூட்டம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் புறப்பட உள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடந்துவருவதைப் பற்றியும் சில கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கெனவே பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம். அதை தொடர்ந்து இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் கர்நாடகத்தில் உள்ள பெங்களூருவில் எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற உள்ளது. அதில் 24 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
பீகாரை தொடர்ந்து கர்நாடகத்திலும் பாஜகவை வீழ்த்துவதற்காக கூட்டப்படும் கூட்டம் பாஜகவிற்கு பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் அமலாக்கத்துறை இன்று அவர்களால் ஏவப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இத்தகைய பணிகளை மேற்கொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டிலும் அதை தொடங்கியுள்ளனர். ஆனால் அதுகுறித்து திமுக கவலைப்படவில்லை.
இன்று உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடியின் இல்லத்தில் அமலாக்கத்துறையினரால் சோதனை நடத்தப்படுகிறது. இது முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் புனையப்பட்ட பொய் வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வழக்கு.
தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இதைப்பற்றிய எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அண்மையில் கூட கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்ட ரீதியாக சந்திப்பார்.
எது எப்படி இருந்தாலும், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் மக்கள் பதில் தருவார்கள் என்பது உண்மை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பீகாரிலும் கர்நாடகத்திலும், தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களிலும் நடைபெற இருக்கும் கூட்டத்தை திசை திருப்ப அவர்கள் செய்யும் தந்திரம் தானே இவையெல்லாமே தவிர வேறல்ல. நிச்சயமாக எதிர்கட்சிகளாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிக்க தயாராக உள்ளோம்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஆளுநர் தேர்தல் பிரசாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டுள்ளார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது. தேர்தல் வேலை சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.