அமைச்சர் பொன்முடியின் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டார்கெட் செய்யப்படுகிறாரா பொன்முடி?
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணிமுதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல சென்னையில் உள்ள அவரது அலுவலகத்திலும், விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள அவரின் வீட்டிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
போலவே அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கௌதம சிகாமணி, கள்ளக்குறிச்சி எம்.பி.யாக (திமுக) உள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் திமுக-வினர் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவர் மகன் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை இங்கே காணலாம்.
* கடந்த 2006 - 2011 காலக்கட்டங்களில் ஆர்.பி.ஐ.யின் அனுமதி இன்றி கௌதம சிகாமனி வெளிநாடுகளில் முதலீடு செய்து, அங்கு சொத்துக்களை குவித்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு அவரின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.
* அமைச்சர் பொன்முடி கனிமவளத் துறை (2006 - 2011) அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக பல்வேறு குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாகவும், அதன்மூலம் அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளப்பட்டு விற்பனை நடந்துள்ளதாகவும் அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதுதொடர்பாக ‘கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த 5 ஆண்டுகளில் 2,64,644 லாரிகள் மூலம் முறைகேடாக செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தினார்’ என விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அவர்மீது வழக்குப் பதிந்திருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கௌதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் சதானந்தன் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத் உட்பட ஏழு பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
அதனை தொடர்ந்து பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியோடு தலைமறைவானார். பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். ஜாமீன் கிடைக்காததால் பொன்முடி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட மூன்று பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின் அவர்கள் வெளியேவந்தபோதும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொன்முடி தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில் 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டன, அவை எங்கே முதலீடு செய்யப்பட்டன என்பது குறித்து, சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து, தற்போது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
* கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரில் கையகப்படுத்திக் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
* 2006 மற்றும் 2011 காலகட்டத்தில், பொன்முடி அமைச்சராக இருந்த போது அவரது மனைவியின் பெயரில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
இதுபோல் அமைச்சர் பொன்முடி மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டியே அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்லப்படுகிறது.
சோதனை நடக்கும் இடங்களில் திமுகவினர் வருகை அதிகரிக்கும் என்பதால் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்த ரெய்டு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகளின் முதலாவது கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் கைதும் செய்யப்பட்டிருந்தார்.

