பாமக-வில் வந்த அதிகார மோதல்... ராமதாஸ் - அன்புமணி இடையேயான வாக்குவாதம்... யார் அந்த முகுந்தன்?
ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல், யார் அந்த முகுந்தன் என்ற தேடலுக்கு வழிவகுத்திருக்கிறது. அன்புமணி - முகுந்தன் இடையே பனிப்போர் சூழ காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன்தான் முகுந்தன். முகுந்தனின் சகோதரர் ப்ரீத்தீவனுக்குத்தான் தனது மூத்த மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார் அன்புமணி. பொறியாளரான முகுந்தன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 4 மாதங்களுக்கு முன்பு பாமகவில் இணைந்த அவர், கட்சியின் சமூக ஊடகப் பேரவை மாநிலச் செயலாளர் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில்தான், தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை கட்சியின் இளைஞரணித் தலைவராக்க ராமதாஸ் முடிவு செய்திருக்கிறார். ஆனால், அக்கா மகனான முகுந்தனுக்கு, தான் வகித்த இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்படுவதற்கு அன்புமணி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
முகுந்தன் பாமக இளைஞரணித் தலைவரானால், தனது மகளின் கணவரும், முகுந்தனின் சகோதரருமான ப்ரீத்தீவன் செல்வாக்கற்றவராக போய்விடுவாரா என்ற எண்ணத்தில் அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழத் தொடங்கி இருக்கின்றன.