“உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான்..” இணையத்தில் வைரலாகும் ராமதாஸின் பழைய பதிவு!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பட்டானூரில், பாமகவின் சார்பில் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம், இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, பாமகவில் இளைஞரணித் தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே பொதுக்குழு மேடையிலேயே மிகப்பெரிய கருத்துமோதல் வெடித்தது. தன்னுடைய மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்த நிலையில், மேடையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார் அன்புமணி. இந்த விவகாரம், தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், "நம்மள படைச்சது சாமின்னு சொல்றாங்க. ஆனா, நம்மள படைச்ச உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான். அவங்க போனதுக்கப்புறம் போயிட்டாங்களேன்னு அழுகுறதைவிட வாழ்ற காலத்துல அவங்கள பொக்கிஷமா பாத்துக்கிறது ஒவ்வொரு புள்ளையோட கடமை.
’முத்துக்கு முத்தாக’ என்ற திரைப்படத்தை நான் இன்று பார்த்தேன். அந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம்தான் இது. அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம் இது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வசனம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பதால், இந்தப் பதிவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.