சென்னை | குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்க போலி ஆவணங்களை கொடுத்ததாக இருவர் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் 22ஆம் தேதி எதிரி வடிவேல் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், வடிவேல் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்து, 21.05.2025 அன்று நீதிமன்றம் வடிவேல் என்பவரை பிணையில் விடுவிப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து வடிவேலை பிணையில் விடுவிப்பதற்கு 2 நபர்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த இருவரும் சமர்ப்பித்த 2 ஆதார் கார்டுகள் மற்றும் 2 ரேஷன் கார்டுகள் போலி என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மோகன் (60) மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீ (50) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து இவர்களிடம் இருந்து 2 ஆதார் கார்டுகள் மற்றும் 2 ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.