சென்னை | சம்பளம் தராத ஆத்திரம் - திருடிய காரை மீண்டும் விட்டுச் சென்ற ஷோரூம் ஊழியர் - நடந்தது என்ன?
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை அண்ணாநகர் பகுதியில் 'ராஜலட்சுமி கார்ஸ்' என்ற கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் கடந்த ஒன்றரை வருடமாக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (44) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு ஷோரூமில் நிறுத்தியிருந்த மாருதி காரை திருடிய ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து 28ஆம் தேதி காலை ஊழியர்கள் வந்து பார்த்தபோது கார் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரை திருடிச் சென்றது ஷோரூமில் பணிபுரிந்த ஊழியர் ரமேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஷோரூம் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சம்பளம் தரவில்லை எனவும், பலமுறை கேட்டும் சம்பள பணத்தை தராமல் திட்டி வந்ததால் காரை திருடியதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னைப் போல பலருக்கும் சம்பள பணம் தராமல் இழுத்தடித்து திட்டி வருவதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே காரை எடுத்துச் சென்றதாகவும் பின்பு தான் செய்த காரியம் தவறு என தெரிந்ததால் மீண்டும் இரண்டு மணி நேரத்திலேயே திருடிய காரை ஷோரூம் பின்புறம் நிறுத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, இனி இது போன்ற தவறுகளை செய்யக் கூடாது என எச்சரித்து ரமேஷை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தார்.