\
Chennai HC Rejects CBI Probe in Veeramani POCSO Cases
Gem VeeramaniANI

வீரமணி போக்சோ வழக்கு; சிபிஐ-க்கு மாற்ற ஒரு காரணமும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு முறையாக விசாரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on: 

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிராக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்புக் குழுவில், கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்web

இந்நிலையில், ஏற்கனவே இந்த வழக்கை முடித்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரிகள் சிறப்பு புலனாய்வு குழுவிலும் இடம் பெற்றிருப்பதால், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், "இந்த விவகாரம் தொடர்பாக 7 வழக்குகள் பதியப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில், வேறொருவருக்காக நிழல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

Chennai HC Rejects CBI Probe in Veeramani POCSO Cases
கோவை | பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்.. சிறப்பம்சங்கள் என்ன?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான வழக்கு தனி நீதிபதி முன் விசாரணையில் உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு, முறையாக விசாரணை செய்து வரும் நிலையில், விசாரணையை முடக்க விரும்புகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும்,விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு காரணமும் இல்லை என, நீதிபதிகள் கூறியதையடுத்து, மனுவை திரும்பப் பெற்று தனி நீதிபதியை அணுகுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்று, மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Chennai HC Rejects CBI Probe in Veeramani POCSO Cases
"தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; திமுகவுக்குத்தான் முழு பொறுப்பு" - வைகோ குற்றச்சாட்டு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com