"தமிழகத்தில் 97 வாக்காளர்கள் நீக்கம்; திமுகவுக்குத்தான் முழு பொறுப்பு" - வைகோ குற்றச்சாட்டு
தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 227வது நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைப்பதில் என்ன பெருமை இருக்கிறது என்று திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது அவரது கருத்து.
எவரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டு மக்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் சகோதரர் ஜோசப் விஜய் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதால்தான், எவரும் எதிர்பாராத விதத்தில் வெற்றி பெற்று, இன்றைக்கு ஆட்சி பீடத்திலும் முதல்வராக அமர்ந்திருக்கிறார். கமிஷன், கரப்ஷன், பர்சன்டேஜ் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் இருந்த 25 முதல் 30% வரை இருந்த கமிஷனை, அந்த ஊழலை அடித்து ஒழித்து விட்டார். அந்த ஒன்றுதான் இந்த ஆட்சியினுடைய பெருமை. அதில் உறுதியாக இருக்கிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறைக்குக் காரணம் முன்பிருந்த ஆட்சி திட்டமிடாததன் விளைவு. அதன் காரணமாகத்தான் தற்காலிகமாக மின்சாரத்தை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. த. வெ. க. ஆட்சியை வீழ்த்தி விட வேண்டும் என்று மனப்பால் குடிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்; குறிப்பாக முன்பு ஆண்ட கட்சி. அது நடக்காது.
SIR பணியை தமிழகத்தில் முழுக்க முழுக்க நடத்தியது திமுக அரசு. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும், திமுகவினர்தான் பட்டியலை திருத்தும் வேலையில், வாக்காளர்களை சேர்க்கும் வேலையில் ஈடுபட்டனர். எனவே SIR சிறப்பாக இருந்தது என்று அப்போது சொன்னார் மு. க. ஸ்டாலின். அவர்களுக்கு சாதகமாகத்தான் பதிவு செய்து கொண்டார்கள்.
SIRக்கு எதிராக நாடு முழுவதும் எரிமலை வெடிப்பது போல, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும், இளைஞர்கள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும், பல்வேறு கட்சியினரும் பெரும் குமுறலுடன் புரட்சிக் குரலை எழுப்பிய நிலையில் இவர்களும் (திமுக) SIRயை எதிர்ப்பதாக கூறினர். தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுகதான் பொறுப்பேற்க வேண்டும்.
முதலில் அமைதி காத்து விட்டு தற்போது பெரும் புரட்சி எழுந்ததும், இப்போது அவர்கள் (திமுக) குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தில் SIR குளறுபடிகளுக்கு திமுகதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை இங்கு நான் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
