“உளறுகிறவர்கள் தெருமுனையில் உளறிக்கொண்டுதான் இருப்பார்கள்” - சீமானுக்கு தி.க. அருள்மொழி பதிலடி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு நான் இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன்’ என கூறியிருக்கிறார். ஏற்கனவே, பெரியார் குறித்து அவர் பேசியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது மற்றொரு கருத்தை முன்வைத்துள்ளார் சீமான்.
சில தினங்களுக்கு முன் பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தன. இதற்கிடையில் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், மீண்டும் பெரியார் குறித்து பேசியிருக்கிறார்.
அதில், “பெரியாரை தமிழ்நாட்டில் பலர் கொண்டாடுகின்றனர். யாராவது ஒருவரேனும் பொது தேர்தலில் பெரியாரின் தத்துவத்தை பற்றி பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறீர்களா? அதோடு, தடை செய்யப்பட்ட இயக்கம், தீவிரவாதி, பயங்கரவாதி எனக்கூறிய எங்கள் தலைவன் பற்றி பேசி வாக்கு சேகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
பெரியார் கடைசிவரை ஆரிய தலைமையான ராஜாஜியோடு நட்போடு இருந்தவர். மணியம்மையை திருமணம் செய்யும்போது சாட்சி கையெழுத்து போட ஆரிய நபரை அழைத்தார் பெரியார்.
திராவிடக்கழகத்தில் இருந்து திமுகவை ஆரம்பித்த அண்ணா 1962-ல் போட்டியிடும் போது ராஜாஜி தலைமையில் சுதந்திர கட்சிகளோடு கூட்டணி வைத்தார்.
பாஜக ஜனசங்கோடு திமுக கூட்டணி வைத்தது. அம்பேத்கரையும், பெரியாரையும் ஒரே கோட்டில் நிறுத்துவதை நிறுத்தங்கள். பெரியாரை பற்றி விவாதிக்க இரு கை நீட்டி நான் தயாராக உள்ளேன்” எனவும் சவால் விடுத்தார். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசியபோது பொங்கலன்று வேட்பாளரை அறிவிப்பதாக சீமான் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சீமானின் இன்றைய பேச்சு குறித்து தி.க. அருள்மொழி நம்மோடு பேசினார். அவர் பேசுகையில்,
“தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க போவதான ஒரு புதிய ஆணையை UGC பிறப்பித்துள்ளது. இப்படி தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தும் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டு உள்ளது.
அதேபோல நீதித்துறையில் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளும் பிஜேபியின் தத்துவங்களை ஆதரிப்பவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தில் சென்று கூட நாம் நமது மாநில உரிமைகளை பெற முடியாது.
தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்வி, வேலை, எதிர்காலம் என எல்லாவற்றையும் கையில் எடுத்து அழிக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இந்த பிரச்னைகளையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில்... இதுபோன்று ஒரு நபரை கொண்டு, பெரியாரை பற்றிய அவதூறு , பொய், தேவையில்லாத விமர்சனம் போன்றவற்றை பரப்பவிட்டு.. தமிழர்களுக்கான உரிமையையும், மாநிலங்களுக்கான உரிமையையும் குறித்து கேட்க வேண்டியவர்களையெல்லாம், இதுபோன்ற அரைகுறையான ஆட்களுக்கு பதில் சொல்லவேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது என்பது தமிழ்நாட்டுக்கு ரொம்ப ரொம்ப ஆபத்தானது.
எனது கருத்து என்னவென்றால், இதுமாதிரியான ஆட்களின் பேச்சுக்கு விளம்பரம் கொடுப்பது, விவாதமாக்குவது என்பதை நிறுத்த வேண்டும். உளறுகிறவர்கள் தெரு முனையில் உளறிக்கொண்டுதான் இருப்பார்கள்.
இன்று தமிழ்நாட்டில் மக்களுக்கும் எதிர்கால பிள்ளைக்களுக்கும் கல்வித்துறையில் பெரிய ஆபத்து வந்துள்ளது. ஆகவே, அதில் கவனம் செலுத்துங்கள், அதை பேசுங்கள்.. அதைத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அப்படி பேசுகிறவர்களை திசைத்திருப்பி, ’உங்கள் மீது சாணியை அடிக்கிறோம். உங்களை தலைவர் மீது செருப்பை வீசுகிறோம். எனவே, இதுப்பற்றி பதில் கூறுங்கள்’ என்கிற சூழ்நிலையை சீமானை வைத்து சிலர் பின்புறத்திலிருந்து இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, சீமான் இந்த இடத்தில் ஒரு கையாள்தான். அவருடைய இதுபோன்ற அவதூறுகளை, உலறல்களை வெளிச்சம்போடுவதை நிறுத்திவிட்டு நமது மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்றார்.