கே.என்.நேருவை நெருக்கும் ED.. நிர்மலா சீதாராமனை சந்தித்த அருண் நேரு.. பின்னணியில் நடப்பது என்ன?
நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கடிதம் எழுதிய தகவல் வெளியான அடுத்த நாளே, அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு எம்.பி, டெல்லிக்குச் சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது அமலாக்கத்துறையின் குறி அமைச்சர் நேருவின் பக்கம் திரும்பியிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் உடனடியாக அமைச்சர் நேருவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதிய தகவல் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெளியானது. அதில் இரண்டாயிரத்து 538 பணியிடங்களுக்கு தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பரபப்பாக பேசப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமைச்சர் நேரு மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி மீண்டும் ஒரு கடிதத்தை அமலாக்கத்துறை எழுதியிருக்கிறது. நகராட்சி நிர்வாக்ததுறையில் ஒப்பந்தப் பணிகளில் 10 சதவிகிதம் வரை கமிஷனாக பெற்றதன் மூலம் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அதற்கான ஆதாரங்களையும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பியிருக்கிறது அமலாக்கத்துறை.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குறி வைத்திருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பதில் அளித்திருக்கும் அமைச்சர் நேரு, பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் செயல்படும் அமலாக்கத்துறையை கண்டு அஞ்ச மாட்டோம் என சூளுரைத்திருக்கிறார்.
இந்தச் சூழலில்தான் கே என் நேருவின் மகனும் எம்.பியுமான அருண் நேரு, அமலாக்கத்துறை கடிதம் எழுதியதாக செய்தி வெளியான மறுநாளே டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறார். கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள், PACL Ltd மோசடியில் சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பதாக தனது x பக்கத்தில் தெரிவித்து இருந்தார் அருண் நேரு.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் ஒரு எம்.பி, மத்திய அமைச்சரை சந்தித்து மக்கள் பிரச்னை தொடர்பாக கோரிக்கை வைப்பது சாதாரணம் தான். ஆனால், அமலாக்கத்துறை விசாரணை அமைப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கீழ் இயங்குகிறது என்பதாலேயே இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது பொய்யையும், புரட்டையும் மட்டுமே மூலதனமாக வைத்து பாஜக பிரச்சாரம் செய்வதாகவும், அமலாக்கத்துறையை தூண்டி அரசியல் செய்வதாகவும் அமைச்சர் நேரு கடுமையாக பேசிய அடுத்த நாளே அருண் நேரு சந்தித்திருப்பதுதான் விவாத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி வருகிறார். அதேவேளையில், அமலாக்கத்துறையும் அமைச்சர் நேருவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை விடாமல் அடுக்கி வருகிறது. எனவேதான் இவை எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி பார்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை.

