செயற்கையாக குறைக்கப்பட்ட ரூபாயின் மதிப்பு : 90-களில் மன்மோகன் எடுத்த Master Stroke என்ன தெரியுமா?
தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 90 ரூபாயை எட்டியுள்ள நிலையில், அது இந்திய பொருளாதாரத்தை மிக மோசமான அளவில் பாதித்து வருகிறது. இதன் காரணமாக இறக்குமதிக்கு அதிக தொகையை இந்திய அரசு செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனுக்கு அதிக வட்டி செலுத்தவேண்டிய இக்கட்டான நிலையும் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டில் பணவீக்கம் ஏற்படுவதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இப்படி ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தியா பல்வேறு சிக்கல்களை சந்தித்தும் நிலையில், ஒரு காலத்தில் இந்திய அரசே செயற்கையாக ரூபாயின் மதிப்பை குறைத்த வரலாறு நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சோஷலிச கொள்கையை பின்பற்றும் நாடாகவே இருந்து வந்தது. சோவியத் ஒன்றியம் வலுவுடன் இருந்த வரையில் இந்தியாவுக்கு சிக்கல்கள் எழாத நிலையில், 1985-ம் ஆண்டுக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை சந்தித்து, 1991-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
இந்தியாவுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதரவு கொடுத்து வந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், இரான்- கத்தார் இடையே ஏற்பட்ட வளைகுடாப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது.
இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, வெறும் மூன்று வாரங்களுக்கு தேவையான பொருள்களை மட்டுமே அரசால் இறக்குமதி செய்ய முடியும் என்ற அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் நிலைமையை சமாளிக்க இந்திய அரசு தன்னிடம் இருந்த 47 டன் தங்கத்தை லண்டன் வங்கியில் அடமானம் வைத்தது.
இத்தகைய சூழலில், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பொருளாதார மேதை மன்மோகன் சிங்கை நாட்டின் நிதியமைச்சராக நியமனம் செய்தார். அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்ப்பதே தனது முதல் பணி என்பதை உணர்ந்த அவர், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அந்நிய செலாவணி நாட்டுக்குள் வர அனுமதிக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க தடையாக இருந்த லைசென்ஸ் ராஜ் எனப்பட்ட அனுமதி சீட்டு முறையை ரத்து செய்தார். இதனால் இந்தியாவுக்கு தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகரித்தன. மேலும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்க்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்த அவர், இதற்காக ரூபாயின் மதிப்பை குறைக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.
ரூபாயின் மதிப்பு குறைந்தால், வெளிநாட்டுச் சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை குறைந்து, இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதால், ரூபாயின் மதிப்பை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக குறைத்தது. Devaluation எனப்படும் இந்தத் திட்டத்தால், ஜூலை 1, 1991-ம் ஆண்டு ரூபாயின் மதிப்பு முதல் கட்டமாக சுமார் 9 சதவீதம் குறைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஜூலை 3, 1991-ம் ஆண்டு ரூபாயின் மதிப்பு மேலும் 11 சதவீதம் குறைக்கப்பட்டது.
இதன் மூலம் 1 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21.10-லிருந்து 25.90 ஆக உயர்ந்தது. மன்மோகன் சிங்கின் இந்த திட்டம் மிகச் சிறப்பான முறையில் இந்திய பொருளாதாரத்துக்கு உயிர்கொடுத்தது. Samsung, LG, Hyundai, Coca-Cola போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தன. இதனால் அரசுக்கு அந்நிய செலாவணி கிடைத்ததோடு, ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் பெருகியது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய ஏற்றுமதியும் அதிகரித்தது.
1991-ம் ஆண்டு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 1996-ம் ஆண்டு 21.6 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2001-ம் ஆண்டில் 42 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2010-ம் ஆண்டு 304 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரித்தது. இது 2025-ம் ஆண்டு 702.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த துணிச்சலான முடிவு, திவாலாகும் நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

