பிரதமருடன் முதல்வர் விஜய் சந்திப்பு : அடுத்த நாளே நடந்த அரசியல் மாற்றம்!
முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு நடந்த பின்னர், தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்லேகரை நியமனம் செய்த மத்திய அரசு. இந்த நடவடிக்கை அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தனி ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், கேரள ஆளுநராக இருந்த ஆர்லேகர் தமிழ்நாட்டையும் சேர்த்து கூடுதலாக கவனித்து வந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலை இருந்ததால் பிற கட்சிகளின் ஆதரவை கோரின. அந்த சூழலில் ஆளுநரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.
மேலும் அமமுக எம்.எல்.ஏ ஒருவர் அணி மாறியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, தவெக தலைவர் விஜய் மீது குதிரை பேர குற்றச்சாட்டு அதிகமாக முன்வைக்கப்பட்டது. எனினும் இறுதியில் தவெக அரசுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்ததும் புதிய அரசுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து தவெக அரசுக்கும், ஆளுநர் ஆர்லேகருக்கும் இடையே சுமூகமான உறவே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அரசு நிகழ்ச்சிகளில் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், அரசு சாராதா கோயில் வழிபாட்டிலும் மோடியுடன், விஜய் பங்கேற்றது தமிழ்நாட்டு அரசியலில் கவனம் பெற்றது.
இந்த சூழலில், பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற அடுத்த நாளே தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்லேகரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

