வரலாற்றில் இல்லாத அளவு மோசம்: 3 டிகிரி அதிகரித்த வெப்பநிலை | குளிர் காலத்தில் காத்திருக்கும் ஆபத்து!
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால் வரலாற்றில் இல்லாத மோசமான சூப்பர் எல் நினோ உருவாகும் அபாயம் உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கடும் வானிலை மாற்றங்கள், பெருமழை, புயல்கள், மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேல்பகுதி வெப்பம் சராசரி அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது எல் நினோ என அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரும் பெருங்கடலான பசிபிக் பெருக்கடல், கிட்டத்தட்ட உலகின் பாதி இடத்தை ஆக்கிரமித்துள்ளதால் இங்கு ஏற்படும் இந்த வெப்ப மாறுதல் உலகம் முழுவதும் பெரும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் என் நினோ விளைவு உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்ந்ததால் இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ விளைவு உருவானது.
இதற்கு முன்னர் 1997–1998 ஆண்டுகளில் பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட சுமார் 2.8 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. அதே போல 2015–2016 ஆண்டுகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து சூப்பர் எல் நினோ விளைவு ஏற்பட்டது. இந்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் கடும் வறட்சி, பெருமழை, அதிவேக புயல்கள் ஆகியவை உருவானது. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3.0 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அதிலும் முந்தைய முறை வெப்பநிலை 3.0 டிகிரி செல்சியஸ் தொட்டபோது பூமியின் சராசரி வெப்பநிலை குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த முறை பூமியின் சராசரி வெப்பநிலையும் அதிகரித்துள்ளதால் வரலாற்றில் இல்லாத மோசமான எல் நினோ விளைவை இந்த ஆண்டு ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.
முன்பு பசிபிக் கடலின் குறிப்பிட்ட மண்டலத்தில் மட்டுமே வெப்பநிலை உயரும். ஆனால் இப்போது அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் உட்பட உலகின் பெரும்பாலான கடல்கள் ஒரே நேரத்தில் அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன என்று தரவுகள் கூறுகின்றன.
கடந்த கோடை காலத்தில் இந்த எல் நினோ விளைவு காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை கடுமையாக அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகளில் வீசிய வெப்ப அலையால் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் தற்போது கோடை காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து வரும் மழை மற்றும் குளிர் காலங்களில் பல்வேறு பகுதியில் பெருமழை பெய்து அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருங்கடல்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் பெரிய அளவில் அதிக சக்தி வாய்ந்த புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக சர்வதேச வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

