“அண்ணன் எடப்பாடி பழனிசாமியை..” - ஒரே ஆண்டில் மாறிப்போன அண்ணாமலையின் பேச்சு.. அன்றும் இன்றும்!
அண்ணாமலை, கடந்த ஆண்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பேசுகிறார். அண்ணாமலையின் பேச்சு மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. எதிரியும் இல்லை. இது அரசியல் களத்தில் வழக்கமாக சொல்லப்படும் சொலவடை. இந்த சொலவடைக்கு நொடிக்கொரு உதாரணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது அரசியல் சதுரங்கம். அப்படியான ஒரு உதாரணம்தான் அண்ணாமலையின் இன்றைய பேச்சும். நெல்லையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்று அனல் பறக்க பேசியிருந்தாலும், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாதுர்ய அரசியல் பேசியிருந்தாலும் இன்னும் தலைவர்களும் என்னவெல்லாம் பேசியிருந்தாலும் இறுதியில் வழக்கம்போல் நின்றது என்னவோ அண்ணாமலையின் பேச்சுதான். அமித் ஷா அண்ணாமலையின் பெயரை சொன்னதும் கூட்டத்தில் பயங்கர கரகோஷம் எழும்பியதும், தேநீர் விருந்துக்காக அண்ணாமலையை அமித் ஷா கூடவே கூட்டிச் சென்றதும் அவருக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இருந்தாலும் இந்த செய்தியில் நாம் பார்க்கவிருப்பது அண்ணாமலை அடித்த அந்தர் பல்டியைப் பற்றித்தான். கடந்த ஆண்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அண்ணாமலை, இன்று அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று பேசியிருக்கிறார். இதுதான் இன்றைய டாக் ஆஃப் த டவுன். அன்றும் இன்றும் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
அதிமுக, பாஜக கூட்டணியும்.. அண்ணாமலை எண்ட்ரியும்!
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் ஏற்ற இறக்கங்கள் இருந்தே வந்துள்ளது. வாஜ்பாய் உடன் கூட்டணி சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருடைய ஆட்சியை கவிழ்த்த வரலாறும் உண்டு. ‘நான் ஒரு தவறு செய்துவிட்டேன்; அதற்கு பரிகாரமாக இனி பாஜக உடன் அதிமுக கூட்டணி வைக்காது’ என்று சொன்ன ஜெயலலிதான், பின்னர் 2004ஆம் ஆண்டில் மீண்டும் கூட்டணி வைத்தார். லேடியா, மோடியா என்று 2014 தேர்தலை சந்தித்த ஜெயலலிதா பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது தனிக்கதை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் பாஜக உடன் கூட்டணி சேர்ந்த அதிமுக, 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இதில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஜாக் பாட் ஆக 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தார்கள்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அண்ணாமலை, தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக 2021 ஜூலை 8 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நாள் முதலே அதிரடி அரசியலை கையிலெடுத்தார். எல்லாவற்றிற்கும் தடாலடியாக பதில் அளித்து எப்பொழுதும் லைம் லைட்டில் அவர் இருந்ததோடு தன்னுடைய கட்சியையும் இருக்க வைத்தார்.
சீண்டிக்கொண்டே இருந்த அண்ணாமலை.. முறிந்தது கூட்டணி!
மாநில தலைவர் ஆனது முதலே ஜெயலலிதா ஊழல்வாதி என்று பேசியது, அண்ணா குறித்த விமர்சனம் என அவருடைய பேச்சு அதிமுகவை சீண்டிக்கொண்டே இருந்தது. தன்னுடைய கட்சியை வளர்ப்பதுதான் முக்கியம் என்று சொல்லி அவர் துணிச்சலாக தோன்றிய கருத்துகளை பேசிவந்தார். மறுபுறமோ, பாஜகவால் தான் சட்டமன்ற தேர்தலில் தோற்றோம் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாக பேசி வந்தார்கள்.
அதிமுக உடன் முட்டல் மோதல் வளர்ந்து தேசிய தலைமை வரை பஞ்சாயத்து சென்றது. அதிமுகவும் அண்ணாமலை பேச்சுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்க கூட்டணி முறிவு என்ற நிலைக்கே வந்து சேர்ந்தது. 2023 செப்டம்பரில் இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.
கூட்டணி முறிவுக்குப் பின் கூர்மையான அண்ணாமலை விமர்சனம்!
கூட்டணியில் இருக்கும்போதே விமர்சிக்கும் அண்ணாமலை, இல்லாதபோது எப்படி பேசியிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை மட்டும் கொடுக்கலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய தலைவர் அண்ணாமலை, “கொங்கு பகுதியில் வந்தவன் நான். கூவத்தூரில் நடந்தது அலங்கோலம். கூவத்தூரில் ஒப்பந்தம் அமைப்பில் முதலமைச்சரை தேர்வு செய்தீர்கள். அதன்பிறகு தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 4-வது இடம் கூட கிடையாது” என்று காட்டமாக பேசியிருந்தார்.
காலம் செல்லச்செல்ல எல்லாமே மாறியது. அதிமுக உடன் கூட்டணி தேவை என பாஜகவும், பாஜக உடன் கூட்டணி தேவை என அதிமுகவும் ஒரு புள்ளியில் வந்து சேர்ந்தார்கள். ஆனால், அதற்கு தடையாக இருந்தவர் அண்ணாமலை என்ற ஒற்றை மனிதர். அவ்வளவுதானே? அந்த தடைய நாங்க பார்த்துக்கிறோம் என்று மத்திய பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு பச்சைக்கொடி காட்டியது. முடிவானது அதிமுக - பாஜக கூட்டணி. கூட்டணியை சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் அமித்ஷா அறிவிக்கும் அந்த தருணத்தில் மாநில தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இல்லை. கச்சிதமாக காய் நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.
மீண்டும் கூட்டணி; ஆனாலும் தொடர்ந்த விமர்சனம்!
என்னதான் கூட்டணி மீண்டும் மலர்ந்துவிட்டாலும் மீண்டும் அண்ணாமலை பேச்சில் சிக்கலான கருத்துகளை சொல்லிக் கொண்டேதான் இருந்தார். அதற்கு அமித் ஷாவும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அமித் ஷா சொன்ன கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு அதற்கு அழுத்தம் கொடுத்து பேசினார் அண்ணாமலை. “என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித் ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித் ஷாவிடம் அதிமுக பேசலாம். கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன்” என்று கூறி நெருப்பை பற்ற வைத்துக் கொண்டே இருந்தார்.
“2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். பாஜக ஆட்சி என்றுதான் சொல்லுவேன். பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன்” என்றும் சொல்லி அதிமுகவை சீண்டிக்கொண்டே இருந்தார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுகள் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை உண்டாக்க, மீண்டும் மேலிடத்தில் இருந்து மறைமுக உத்தரவு வர “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் ஒரே நோக்கம், திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவதுதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்பதை அறிவித்துவிட்டோம். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை” என்று முடித்துவைத்தார் அண்ணாமலை. இருப்பினும், அது ஏதோ பட்டும் படாமல் பேசியதாகவே பார்க்கப்பட்டது.
அண்ணாமலை பேச்சில் அதிரடி மாற்றம்!!
நேற்றைய கூட்டத்தில் அமித்ஷாவை மேடையில் வைத்துக் கொண்டு அண்ணாமலை பேசிய அந்தப் பேச்சுதான் பலரது புருவத்தையும் உயரவைத்தது.
“அடுத்த 8 மாத காலம் கடுமையாக உழைத்து இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைக்க வேண்டிய பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்கிறது. அன்பு சொந்தங்களே, நாம் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துக் காட்ட வேண்டும். மிகக்கடுமையாக இந்த நான்கு ஆண்டுகள் உழைத்து இருக்கிறோம்” மிகத் தெளிவாக பேசினார் அண்ணாமலை. ஆம், கடந்த ஆண்டு மிகக் கடுமையாக எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் விமர்சித்து வந்த அண்ணாமலை இந்த ஆண்டு அப்படியே எதிர் திசையில் பேச வைத்துவிட்டது அரசியல் களம்.
அண்ணாமலையின் அன்றைய இன்றைய பேச்சுகள் தற்போது இணையத்தில் தீயாய் பகிரப்பட்டு வருகிறது. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அண்ணாமலையில் பேச்சு மீண்டும் நிரூபித்திருக்கிறது.