குறுஞ்செய்தியைக் காட்டிய ஓபிஎஸ்.. ஆதாரத்தைக் காட்டச் சொன்ன நயினார்.. குறுக்கிட்ட அண்ணாமலை!
தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்தார். ’உடல்நலம் குறித்து அவரிடம் விசாரித்தேன்’ என ஓபிஎஸ் சொன்னாலும் இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ”ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன்” என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இதை மறுத்த ஓபிஎஸ், இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ”பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று நயினார் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை. நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும்” என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
இந்த அறிக்கைக்குப் பின் பேசிய நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நான்தான் அவரை தொடர்புகொண்டேன்” என்று தெரிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் காண்பித்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் காட்டிய குறுஞ்செய்தி தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ”செல்போனில் காட்ட வேண்டாம். ஆதாரமாகக் கொடுங்கள்” என்று கூறி மேலும் பேச முற்பட்டபோது, ”பிறகு பேசலாம்” எனக் கூறி நயினார் நாகேந்திரனை முன்னாள் தலைவர் அண்ணாமலை அழைத்துச் சென்றார். அண்ணாமலை, நயினார் நாகேந்திரனைப் பேசவிடாமல் அழைத்துச் சென்று அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக பாஜக முன்ன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “பாஜக தலைவர்களைக் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாகத் தன்னுடைய அரசியல் நகர்வை நகர்த்தியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.