அதிமுக குறித்த கேள்வி.. ’வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன்’ என பதிலளித்த அண்ணாமலை! பரபரப்பு பேச்சு!
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்பாரதிய ஜனதா கட்சியின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பா.ஜ.க ஆட்சி 11 ஆண்டுகளை கடந்து இருக்கின்றோம், பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 2014, 2019 வாக்குறுதிகளை எடுத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும், பொது சிவில் சட்டத்தை தவிர மற்ற வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதிமுக குறித்த கேள்வி.. அதிரடியாக பேசிய அண்ணாமலை!
அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், பாதி தொதியில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது உண்மையல்ல என பதில் அளித்தார். 2026 தேர்தலில் யார் எவ்வளவு சீட் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள், என்னை பொறுத்த வரை பா.ஜ.க நிறைய சீட் நிற்க வேண்டும். அதுதான் கடந்த 11 ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் பாஜக கட்சிக்கு சரியானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுகவுடன் கூட்டணி என்பது உங்களுக்கு விருப்பமில்லை என கூறப்படுகின்றதே, அதிமுக தலைவர்கள் பெயர்களை தவிர்ப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் பா.ஜ.க வின் தொண்டன், உயிர் இருக்கும் வரை கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். ஆனால் கட்சி முடிவிற்கு கட்டுப்படுகின்றேன், கட்சி கூட்டணி குறித்து மேலிருக்கும் தலைவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்கும் போது நான் அதற்கு கட்டுப்பட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பா.ஜ.க அதிமுக கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கூட்டணி ஆட்சி, கீட்டணி என்று இல்லாமல் பாஜக ஆட்சி என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார். இன்றைக்கு எங்கள் கட்சியின் தலைவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த முடிவுக்கு தொண்டனாக நாங்கள் கட்டுப்படுகிறோம். இது பற்றி எங்கள் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார், என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என் இதயத்திற்குள் இருக்கட்டும், நேரம் வரும்போது பேசலாம் எனவும் தெரிவித்தார். பதில் சொல்லும் சரியான தலைவர்கள் வரும்பொழுது அவரிடம் கேளுங்கள், அதுவரை இதுகுறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.