முருக பக்தர்கள் மாநாடு | விமர்சிக்கப்பட்ட அண்ணா; வருத்தம் தெரித்த ராஜேந்திர பாலாஜி..!
முருக பக்தர்கள் மாநாடு
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உட்பட ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் மலைக் கோயில் பின்னணியில் இருப்பது போன்று மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது, முருகன் மாநாட்டு மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முன்னிலையிலேயே அவர்களது கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிடப்பட்டது, பேசுபொருளானது.
அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துவிட்டார்கள்
பெரியார், அண்ணா விமர்சிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இதுவெல்லாம் ஒரு உதாரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையாக இருந்தாலும்கூட, அண்ணாவை, பெரியாரை, ஜெயலலிதா அம்மையாரை, எம்ஜிஆரை அவர் பாடாத வசைபாடுகளே இல்லை. அவர்கள் அழைக்கும் ஒரு மேடையில் இவர்கள்போய் அமர்கிறார்கள் என்றால் அந்த இயக்கத்திற்கான அடிமை சாசனத்தை எழுதிக்கொடுத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். திராவிடத்தையே அழிப்போம் என சூளுரைத்த ஹெச் ராஜாவும் அந்த மேடையில்தான் இருந்தார்; திராவிடம் இனி தமிழகத்தில் கோலோச்ச முடியாது என சொன்ன அண்ணாமலையும் அந்த மேடையில்தான் இருந்தார். என்னுடைய பார்வையில் நேற்றைய மாநாடு ஒட்டுமொத்தமாக அரசியல் மாநாடு தான். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்பதுதான் எங்களது முதலமைச்சரின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் என்றைக்கும் நாங்கள் உறுதியாக இருப்போம்” எனத் தெரிவித்தார்.
ஆன்மீக நிகழ்வில் விமர்சனம் தேவையற்றது
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பெரியாரும் அண்ணாவும் விமர்சிக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தினைத் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய ராஜேந்திர பாலாஜி, “ஆன்மிக நிகழ்வில் அண்ணாவை விமர்சிப்பது போன்ற கருத்துகள் தேவையற்றது” எனத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “பேரறிஞர் அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் தமிழகத்தில் பிறக்கவில்லையென்றால், தமிழக அரசியலில் அவர் இடம்பெறவில்லையென்றால் சாமானியர்கள் எல்லாம் அரசியலில் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட புகழுக்கு சொந்தக்காரரான அண்ணாவை கலங்கப்படுத்தும் ரீதியில் சிறு துளி ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. அதேவேளையில் முருக பக்தர்கள் மாநாடு மிகவும் போற்றுவதற்குறியது.. மதிக்கக்கூடியது. இம்மாதிரியான ஆன்மிக நிகழ்வில் இந்தக் கருத்தை சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் போன்ற பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறோம் என்றால் அதற்கு அடிக்கோலிட்டவர்கள் அண்ணா, பெரியார் போன்றவர்கள்தான். எனவே அவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக அந்நிகழ்வை பயன்படுத்தியது தவறு” எனத் தெரிவித்தார்.
முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முருக பக்தர்களை விமர்சிப்பவர்கள் அத்தனைபேரும் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள்; அவர்கள் எதிர்க்கத்தானே செய்வார்கள். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு முருக பக்தர்கள் மாநாடு பயத்தையும் பீதியையும் கொடுத்துள்ளது. பொது ஜனங்களைப் பொறுத்தவரையில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக நடந்த எழுச்சி மாநாடு. பழனியில் நடைபெற்ற மாநாடு பக்தியே இல்லாத மாநாடு. பழனியில் நடைபெற்றது நிர்பந்த மாநாடு. மதுரையில் நடைபெற்றதுதான் பக்தர்களுடைய மாநாடு” எனத் தெரிவித்திருந்தார்.
உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அண்ணா விமர்சிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ’அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.
அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்.
அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக!
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, ’சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!’ என்றும் ’திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே’ என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு ’திராவிட’ என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.
திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக” எனத் தெரித்துள்ளார்.