’சோகம் இழையும் கண்கள்..’ மாஸ், ஸ்டைல் மட்டுமல்ல.. ரஜினியின் எமோஷனல் காட்சிகளும் தனி ரகமே!
ரஜினி என்றதும் பலருக்கும் அவரது ஸ்டைல், கரிஸ்மா என மாஸான விஷயங்களே நினைவுக்கு வரும். ஆனால் அவருக்குள் கிளாசிக் ஆன நடிகர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறான். ஆனால், அந்த யதார்த்த நடிகருக்கு தீனி போடத்தான் இங்கே இயக்குநர்கள் குறைவாக இருக்கிறார்கள் அல்லது அவரது ஸ்டார்டமே அது பெரிய தடையாக மாறியிருக்கிறது.
உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் ரஜினி அலட்டிக் கொள்ளாத நடிப்பு உண்மையில் வியக்கத்தக்க ஒன்று. நான் நடிக்கிறேன் பார் என்று இல்லாமல் தன்னுடைய உடல் மொழியாலும், பல நேரங்களில் கண்களாலுமே உணர்வுகளை கடத்தும் நடிப்பாற்றல் கொண்டவர் தான் ரஜினிகாந்த்.
1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்களில் தொடங்கிய ரஜினியின் சினிமா பயணம் கூலி படம் வெளியாகும் நாளையுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ரஜினி என்றதுமே ஸ்டைலிஸ் ஆன அவரது மேனரிசம், மாஸான சண்டைக் காட்சிகள் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஏனெனில் அவரது நகைச்சுவை காட்சிகள் கூட சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், ரஜினி தன்னுடைய இயல்பான நடிப்பாற்றலால் உயிர் கொடுத்த எத்தனையோ எமோஷனல் காட்சிகள் உண்டு. அது குறித்து கொஞ்சம் அலசி பார்க்கலாம்.
கபாலி, காலாவில் தலைவர்..
முதலில் இன்றைய இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்றால் கபாலி மற்றும் கலா படங்களில் இருந்து இரண்டு காட்சிகளை சொல்லலாம். கபாலி படத்தின் பெரும்பகுதி மாஸான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் இடைவேளைக்கு பிறகு மனைவியின் தேடும் படலம் நிரம்பி இருக்கும். அந்த படலம் முழுவதும் ரஜினி தன்னுடைய உணர்வு பூர்வமான நடிப்பால் நம்மை கட்டிப்போட்டிருப்பார். ஆனாலும், தன்னுடைய மனைவியின் இடத்தை கண்டுபிடித்த பிறகு மறுநாள் சந்திப்பது உறுதியான பிறகு அந்த இரவு எப்படி நகரும் என்பதை ரஜினி வெளிப்படுத்திய விதம் ஒரு கவிதை என்றே சொல்லலாம்.
அதுவும் தன்னுடைய மகளிடம், “இத்தன வருஷம் எங்கேயோ தூரம் இருந்தவ இன்னிக்கு இங்கே எங்கயோ பக்கத்துல இருக்கா.. என்ன நெனச்சிக்கிட்டு தூங்கிட்டு இருப்பா.. என்ன பாத்த உடனே எப்டி ரியாக்ட் பண்ணுவா, என்ன நெனப்பா, இதெல்லாம் நெனக்கும் போது நெஞ்ஜெல்லாம் திக்கு திக்குனு இருக்குமா.. ஒடம்பெல்லா ஒரு மாதிரியா இருக்குமா.. என்னுடைய ஹார்ட் பீட் எனக்கே கேக்குது..” என்று உணர்வு பொங்க படபடவென பேசிக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் வெட்கம் வந்தது போல் அப்படியே பேச்சை துண்டித்து நீ போய் தூங்கு என்று மகளிடம் அவர் சொல்லும் அழகே தனியாக இருக்கும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த மனைவியை இன்னும் சில மணி நேரங்களில் பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கத்தை அப்படி வெளிப்படுத்தியிருப்பார்.
அடுத்து, காலா படத்தில் அந்த இருட்டு அறையில் சிமில் விளக்கின் ஒளியில் முன்னாள் காதலியான செரீனாவை பார்க்கும் போது முதல் பார்வையிலேயே கரிகாலனாக மிரட்டியிருப்பார் ரஜினி. குளேசப்பில் ரஞ்சித் ஒரு பிரேம் வச்சிருப்பார் பாருங்க.. அந்த பிரேமே தனி ரகம். அந்தக் கண்களை அப்படியே ஒத்திக் கொள்ளலாம். அந்த காட்சி முழுவதும் முன்னாள் காதலியை பார்த்த ஆனந்தத்தை தன்னுடைய உடல் மொழியால் நிரப்பி இருப்பார். மீண்டும் ரெஸ்டாரண்டில் இருவரும் சந்திக்கும் காட்சிகளில் முழுவது கண்களாலே ரஜினி காதல் மொழிகளை பேசுவார். ஒவ்வொரு பிரேமும் அப்படி இருக்கும். தன்னுடைய மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதை பதட்டத்துடனே காதலியின் மனமும் புண்படாமல் ரஜினி விதம் நம்முடைய அந்த உணர்வில் ஆட்கொள்ள வைக்கும்.
தளபதி, அண்ணாமலை,
ரஜினி நடிப்பை மெச்சும் படங்களாக முள்ளும் மலரும், ஜானி, தளபதி, ஆறிலிருந்து அறுபது வரை, தப்புத்தாளங்கள் போன்ற படங்களை சொல்வார்கள். இந்தப் படங்கள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். தளபதியில் ரஜினி - ஜெய் சங்கர் இடையிலான அந்த காட்சியில் பல விதமான எமோஷனலை கொட்டித் தீர்த்து இருப்பார் ரஜினி. அதோடு, பிறந்த உடன் தூக்கி எறிந்த தாய் 25 வருடங்களுக்கு பிறகு பார்க்க வரும் போது கோபமும், பாசமும் கொண்ட வார்த்தைகளாலும், வார்த்தைகளே இல்லாமலும் உணர்வுகளை வெளிப்படுத்தி ரஜினி அசத்தியிருப்பார். இதையெல்லாம் தாண்டி இன்னும் ரஜினியின் நடிப்பில் மிளிர்ந்த பல எமோஷனல் காட்சிகள் இருக்கிறது.
அண்ணாமலை படத்தில் ரஜினி ’அசோக்’ என ஆக்ரோஷமாக பேசும் வசனம் தான் பலருக்கும் நினைவில் இருக்கும். ஆனால், அந்தப் படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சியில் ரஜினி நம்மை கலங்க வைத்திருப்பார். தன்னுடைய மகள், நண்பனாக இருந்து எதிரியாக மாறிய அசோக்கின் மகனே காதலிப்பது தெரிந்த உடன் மகளிடம் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கும். பொறுமையாக மகளிடம் எடுத்துக் கூறிக் கொண்டே இருந்த ரஜினி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அடித்துவிடுவார். பின்னர் மனைவியும், தாயும் தடுக்கும் போது, ‘நான் யார் மேல எல்லாம் அதிகம் பாசம் வைக்கிறனோ, அவங்க எல்லாம் என் நெஞ்சுமேல ஏறி மிதிக்கிறாங்க’ என்று ஆதங்கத்துடன் சொல்வார். அவருக்கே உரித்தான ஸ்டைலான பாணியுடன் இடது கையை முன்னாள் நீட்டி அவர் சொல்லும் தொனியே சிலிர்க்கும் வகையில் இருக்கும். அது அவருக்கே உரித்தான உடல் மொழி.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் இதேபோன்ற காட்சியை பார்க்கலாம், தன்னுடைய மகளுக்கு தனக்கே தெரியாமல் கல்யாணம் நிச்சயம் ஆனது அறிந்ததும், ‘மலைக்கு கீழ இருக்கிற நம்மளா கேட்டா மலைக்கு மேல கல்யாணம் நடக்குது’ என்று ரஜினி பக்குவப்பட்ட வார்த்தைகளில் சொல்லும் பாங்கே தனி. மனைவியான ராதிகா இறந்தபிறகு அந்தப் படத்தில் ரஜினி அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
படிக்காதவன், தர்மதுரை, புதுக்கவிதை
படிக்காதவன் படத்தில் தம்பியே துரோகம் செய்ததை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சிகளில் மிரட்டியிருப்பார் ரஜினி. ஆங்கிலத்தில் தன் தம்பி திட்டுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டு அவர் எஸ்.. எஸ்.எஸ் என்று சொல்லும் பொழுது இயல்பான நடிப்பில் உணர்வுகளை கொட்டியிருப்பார். சிவாஜியை மீண்டும் பார்க்கும் இடத்திலும் தம்பியை நினைத்து அம்பிகாவிடம் நொந்து பேசும் பொழுதும் எமோஷனலாக ரஜினி நம் மனதில் இடம்பிடித்திருப்பார்.
ரஜினியின் எமோஷனலாக நடிப்பிற்கு தர்மதுரை படம் ஒரு விருந்து என்றே சொல்லலாம். தம்பிகளால் ஏமாற்றப்பட்டு தந்தையை பறிகொடுத்து சொந்த குழந்தைகளை பறிகொடுத்து செய்யாத குற்றத்திற்காக சிறைவாழ்க்கை அனுபவித்து சிறையில் இருந்து திரும்பி வரும் காட்சியில் இருந்து ரஜினி வெளிப்படுத்தும் உணர்வுகள் ஆகாசமாக இருக்கும். கோபத்தில் தம்பிகள் வீட்டிற்கு சென்று அவர்களை அடித்து வெளுக்கும் அவர் தம்பியின் மனைவி தடுத்ததும் அவர்களை விட்டு விடுவார். அவளுக்காகவே உங்களை விடுகிறேன்.. இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற வார்த்தைகளே இல்லாமல் உடல் மொழியால் ஆவேசமாக ரஜினி சொல்வார். இந்தக் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு வேறு ரகமாக இருக்கும்..
புதுக்கவிதை படத்தில் வரும் காதல் காட்சிகள் எவர் க்ரீன் ரகம். காதலிக்கு வேறொரு வாழ்க்கை அமைந்துவிட்டது அவரை தொந்தரவு செய்யக்கூடாது என ரஜினியும், ரஜினிக்கு வேறு வாழ்க்கை அமைந்துவிட்டது அவரை தொந்தரவு செய்யக் கூடாது என அந்தக் காதலியும் நினைத்து விட்டுக் கொடுத்து பேசுவார்கள். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் இந்த காட்சிகள் அனைத்தும் காவியம் போன்று இருக்கும். நான் போகட்டா என காதலி கேட்க ‘அதன் போயிட்டயே’ என சொல்லும் வார்த்தையில் அத்தனை வேதனைகள் இருக்கும். அப்பொழுதே நடிப்பில் அதகளப் படுத்தி இருப்பார் ரஜினி.
படையப்பாவில் தன் தங்கையை காதலித்த நாசர் வேறொரு திருமணம் செய்துகொண்ட பிறகு அவரை சமாதானம் செய்ய சொல்லும் வசனங்களாகவிருக்கட்டும், ’உன் மனசுக்கு புடிச்ச மாப்பிள்ள’ என சொல்லிவிட்டு கண்ணீர் சிந்தும் இடங்கள் என அனைத்திலும் ரஜினி அவ்வளவு லாவகமாக எமொசனலை கடத்திருப்பார்.
இன்னும் பல்வேறு படங்களில் அவருடைய எமோசன் காட்சிகள் நம்மையும், நம் மனதையும் பிசைந்துவிட்டிருக்கும். 50 ஆண்டுகளாக ரஜினி என்ற ஆகச்சிறந்த நடிகர் நம் எமோசன்களை ஆண்டுவருகிறார் என்றால் மிகையாகாது!