”அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடையில்லை” - உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசியல் களத்தில், தந்தை-மகன் இடையேயான பிளவு, ஒரு கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புள்ளியில் வந்து நிற்கிறது. ஒருபுறம், தன் வியர்வையை ஊற்றி பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு ஆலமரமாய் வளர்த்தெடுத்ததாகச் சொல்லும் ராமதாஸ், "அதே மரத்தின் கிளையில் செய்யப்பட்ட கோடாரியால் வெட்ட முயற்சிக்கிறார்கள்" என்று வேதனை தெரிவிக்கிறார். மறுபுறம், கட்சியின் தலைவர் என்ற முறையில் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் தனக்கே உண்டு என்று அன்புமணி தரப்பு கூறி வருகிறது. இந்த மோதல் ஒரு குடும்ப பிரச்சினை மட்டுமல்ல, ஒரு கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கி, தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்வுகள், பாமகவின் அதிகாரப் போட்டி யாரிடம் உள்ளது என்பதைத் தீர்மானிப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிப்பதாக அமையும்.
இந்த நிலையில், அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது ராமதாஸ் தரப்பு. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரையும் மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு வர உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறையில் அன்புமணி ஆஜரானார். மருத்துவர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்தபடியே காணொளி வாயிலாக ஆஜரானார். இருவரிடமும் விசாரணை முடிந்த நிலையில், சற்று நேரத்தில் பொதுக்குழு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.