“தந்தையையே வேவு பார்த்த மகன்தான் அன்புமணி” - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு! பாமகவில் மீண்டும் பரபரப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல்போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையே தனது அதிகாரப்பூர்வ X மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடமும் ராமதாஸ் மனு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தைலாபுரத்திலிருக்கும் டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருந்தது. ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்தவர்கள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என்று ராமதாஸும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது அன்புமணிதான் என ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான் எனவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
பொதுக்குழு தொடர்பாகவும் இருதரப்புக்கும் இடையே முரண் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 காலை 10 மணிக்கு அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 11 மணியளவில் மகாபலிபுரத்திலுள்ள அரங்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கும் பதிலளித்திருக்கும் ராமதாஸ், “பாமக என்பது நான் உருவாக்கிய கட்சி. 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று வேர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி. வேறு எவரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. என்னால் செயல் தலைவர் என்று சொல்லப்பட்ட அவர் 9ஆம் தேதி பொதுக்குழு என சொல்கிறார். அது கட்சியின் விதிகளுக்குப் புறம்பானது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ராமதாஸின் முழு செய்தியாளர் சந்திப்பு கீழே..