ஓபிஎஸ் மற்றும் தினகரனை அரவணைக்கிறதா டெல்லி? பாஜக போடும் கணக்கில் இவர்கள் பங்கு என்ன?
அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியுள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா-விடம் இருந்து அழைப்பு வரலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், அதிமுக வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் டெல்லி சென்று அமித் ஷா-வை சந்தித்த செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியிருக்கிறேன் எனத் தெரிவித்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலர் தினகரனும் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இருவரும் சந்திப்பார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக - அதிமுக கூட்டணியின் தொடர்ச்சியாக ஏற்பட்ட புறக்கணிப்பின் விளைவாக, பன்னீர்செல்வம், தினகரன் இருவரும் அடுத்தடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்கள்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்தாலும் இப்போதும், பாஜக கூட்டணியே தன்னுடைய முதன்மை தேர்வு என்றும் பழனிசாமியை முதல்வர் முகமாக ஏற்க முடியாது என்றும் இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டியது பாஜகவின் பொறுப்பு என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறியிருந்தார்.
தொடர்ந்து, அடுத்த சில நாட்களிலேயே நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார் பன்னீர்செல்வம் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மர். இதிலிருந்து, பன்னீர்செல்வமும் தினகரன் நிலைப்பாட்டிலேயே இருப்பதை இந்த விஷயம் வெளிப்படுத்தியது.
இதனூடாகத்தான் அதிமுகவில் பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பியிருக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனை அமித் ஷாவை சந்தித்த செய்தி வெளியானது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில் உறுதியாக இருக்கும் அமித் ஷா, திமுகவுக்கு எதிரான எல்லா சக்திகளையுமே ஒரே குடையின் கீழ் கொண்டுவர விரும்புகிறார். அதன் ஒரு பகுதியாகவே அடுத்தடுத்த சந்திப்புகளும் நகர்வுகளும் திட்டமிடப்படுகின்றன என்கிறார்கள்.