’ஒரு ஆண்டு.. 2 கண்டங்கள்.. 26 போட்டிகள்..’ ஆதரவாளர்களுக்கு அஜித்குமார் ரேஸிங் அணி நன்றி!
2025-ம் ஆண்டில் அஜித்குமார் ரேஸிங் அணி 2 கண்டங்களில் சுமார் 26 போட்டிகளில் பங்கேற்று நீண்ட ரேஸிங் பயணத்தை கண்ட இந்திய அணியாக ஒரே ஆண்டில் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அஜித்குமார்.
தமிழ் சினிமா துறையில் முன்னனி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கி சர்வதேச ரேஸிங்கில் சாதனைகளை படைத்து கலக்கிவருகிறார்.
தனது சிறு வயது முதலே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்குமார், கார் ரேஸிங்கிலும் ஒரு அங்கமாக பங்கேற்று வந்தார். இடையே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பி வெற்றிகரமான ஒரு பயணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் (Ajith Kumar Racing)’ என்ற ஒரு அணியை உருவாக்கிய அவர், Fabian duffeiux, mathew deutry, Cam McLeod என்ற மூன்று ஓட்டுனர்களை ஒப்பந்தம் செய்து சர்வதேச ரேஸிங் தொடர்களில் பங்கேற்று வெற்றிகளை வசப்படுத்திவருகிறார்.
2025 வருடத்தில் மட்டும் 2 கண்டங்களில் நடைபெற்ற 4 சர்வதேச தொடர்களில் 26 போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி இரண்டு ரேஸில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
இதன்மூலம் அதிகப்படியான சர்வதேச போட்டிகளில் பங்கேற்று நீண்ட ரேஸிங் பயணத்தை கண்ட இந்திய அணியாக ஒரே ஆண்டில் சாதனை படைத்துள்ளது. இதற்காக தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் அஜித்குமார் மற்றும் அஜித்குமார் ரேஸிங் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பயணத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்..
நடப்பு ஒரு ஆண்டில் அஜித்குமார் ரேஸிங் அணி செய்த சாதனைக்கும், அதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் அஜித்குமார் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
’அஜித் குமார் ரேசிங் - மறக்க முடியாத முதல் சீசன்! ஆர்வம், பொறுமை, முன்னேற்றம் - மூன்றின் பயணம்’ எனும் தலைப்பில் ஒரு ஆண்டில் படைத்திருக்கும் சாதனைகளை பட்டியலிட்டிருக்கும் அஜித்குமார் ரேஸிங் அணி, ஆதவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
அஜித்குமார் மற்றும் அஜித்குமார் ரேஸிங் தரப்பில், “இந்த ஆண்டில் நடந்த அனைத்தையும் சொல்வதற்கு ஒரு புத்தகம் போதும்; ஆனால் முக்கியமானது. ஒவ்வொரு சுற்றிலும் நாங்கள் வலுவாகி வந்தோம். இது தொடக்கம் மட்டுமே.
இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும் தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று, ஒரு இந்திய அணியாக இதுவரை இல்லாத அளவில் விரிவான சர்வதேச ரேசிங் அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்த பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியைத் அஜித்குமார் ரேஸிங் அணி தெரிவித்துக்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.