”ஷாலினி இல்லைனா நான் இல்லை.. அவருக்கு தான் மொத்த கிரெடிட்” – பத்ம பூஷண் அஜித் குமார்
சினிமா, நடிகர் என்பதையெல்லாம் தாண்டி இந்தியாவிற்காக கார் பந்தயத்தின் மூலமும் பெருமைத் தேடித்தந்துள்ள நடிகர் அஜித்குமாருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கலைத்துறைக்காக வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டார் அஜித்குமார். இந்தியாவின் உயரிய விருதை பெறுவதை பார்ப்பதற்காக வந்திருந்த அஜித்தின் மனைவி, மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் அதீத மகிழ்ச்சியில் பூரித்து போயினர்.
இந்நிலையில் பத்ம பூஷண் விருது பெற்றபிறகு பேசிய நடிகர் அஜித்குமார், தன் வாழ்நாளில் பெற்ற அத்தனை அங்கீகாரத்திற்கும் மனைவி ஷாலினிக்கு தான் கிரெடிட் கொடுக்க வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ஷாலினி எப்போதும் என்னை தாழ்ந்துபோக விட்டதில்லை..
பத்ம பூஷண் விருது வென்ற பிறகு பேட்டி ஒன்றில் பேசிய அஜித் குமார், “என்னை சுற்றி நடக்கும் அனைத்தும், மிகவும் அற்புதமான உணர்வை தருகிறது; கனவில் வாழ்வது போல இருக்கிறது... யாராவது கிள்ளி எழுப்பி விட்டுவிடுவார்களோ என பயப்படுகிறேன்.
குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருது பெற்றுள்ளேன்; இந்திய அரசாங்கத்திற்கும், பிரதமர் மோடிக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலன் விரும்பிகளுக்கும் என் நன்றி.
ரசிகர்களின் அன்பால் நிறைந்து பிரபலமாக இருந்த ஷாலினி, எனக்காக பல தியாகங்களை செய்துள்ளார்; நான் தவறான முடிவுகளை எடுக்கும்போதும்கூட, எனக்கு ஊக்கமளித்து பக்கபலமாக என்னுடன் இருப்பார். நான் என் வாழ்வில் சாதித்த அத்தனைக்கும், அவருக்குதான் கிரெடிட் கொடுக்க வேண்டும்.
பத்ம பூஷண் விருது கிடைத்ததை அறிந்தபோது, சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்தது.
தல என்பதுபோல அடைமொழிகளில் எனக்கு விருப்பமில்லை; அஜித் என்றோ, ஏ.கே. என்றோ அழைக்கப்படவே விரும்புகிறேன். எல்லா தொழிலையும் போல இதுவும் ஒரு தொழில். செய்யும் வேலைக்கு நான் சம்பளமும் பெறுகிறேன். எனவே அடைமொழிகள் தேவையில்லை.
எப்போதுமே என் வாழ்வை எவ்வளவு எளிமையாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்வேன். Rifle Shooting, Aero modeling என பல துறைகள் எனக்கு நண்பர்கள் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.