
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்தது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் விவகாரம் பெரியளவில் பேசப்பட்டது. அதில் மணிப்பூர் நிகழ்வை மகாபாரதத்துடன் ஒப்பிட்டு பேசினார் திமுக எம்.பி. கனிமொழி
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “1989ல் ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவை அங்கிருந்தவர்களால் இழுக்கப்பட்டது.
அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப்பார்த்து சிரித்தனர்... நகைத்தனர்! அப்படியான நீங்கள், இன்று கௌரவர் சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா? நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள்” என மக்களவையில் பேசி இருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அது குறித்து பேசும் போது, “ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக்கொண்ட நாடகம். அதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும் அப்போது தான் உடன் இருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் சட்டமன்றத்தில் பேசி அதுவும் அவைக்குறிப்பிலே உள்ளது. எனவே தமிநாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை பொய்யாக திரித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது. அவையை தவறாக வழிநடத்துவது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரியை தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “திமுகவை பொறுத்தவரை வரலாற்றை மொத்தமாக மறைப்பது தான் அவர்களது வேலை. எந்த வரலாற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்? அன்று என்ன நடந்தது, ஊடகங்களில் பத்திரிகைகளில் வந்த செய்திகள் என்னென்ன, அப்பட்டமாக அங்கு நடந்த விதிமீறல்கள், மரபு மீறல்கள் போன்றவைகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் தெரியும். திருநாவுக்கரசு இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவர் எப்படி அதிமுக-காரராக பேசுவார்? திமுக கூட்டணியில் வேறு இருக்கிறார். களத்தில் போராடக்கூடிய கம்யூனிஸ்டுகளே ஸ்டாலினை தூக்கிப்பிடிக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் மறந்து போன கட்சியாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் அதற்கு ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருப்பது திமுக தான். திருநாவுக்கரசர் அந்தக்கருத்தை அதிமுகவில் இருந்த போது பேசி இருந்தால் அதை உண்மை என சொல்லலாம். நாங்கள் பொய்சொல்லுகிறோம் என்றால் சட்டசபையில் பதியப்பட்ட காட்சிகளை பாருங்கள். அன்றைய பத்திரிக்கைகளில் பாருங்கள். அதில் என்ன மாதிரியான சூழல், பிரச்னைகள் உள்ளதென கவனியுங்கள்.
இதுமட்டுமல்ல திமுக எல்லா விஷயங்களிலும் இம்மாதிரி தான் செய்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனை எங்களால் கிடையாது என்பார்கள், கச்சத்தீவு எங்களால் கிடையாது என்பார்கள். அவர்கள் கதைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். வரலாற்றை மறைத்து பேசுவது தான் அவர்களது வாடிக்கை. தமிழ்நாட்டு பெண்களும் மக்களும் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவராக இருந்தார். நாடகம் ஒத்திகை என சொல்லும் போதே தெரிகிறது, இனி அம்மாவை வைத்து தான் அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். இரண்டரை வருட ஆட்சியில் மக்கள் அவர்களை புறக்கணித்துவிட்டார்கள். மக்களை திசை திருப்ப இன்னும் அவர்களுக்கு அம்மா தேவைப்படுகிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் எந்த அளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்று” என்றார்.