’ஆக.20’.. ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளா? - அதிமுக மதுரை மாநாடு Vs திமுக உண்ணாவிரதப் போராட்டம்!

நீட் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
eps, jeyakumar, mk stalin
eps, jeyakumar, mk stalinpt web

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், மருத்துவர் அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, திமுக மாணவர் அணித் தலைவர் ராஜிவ்காந்தி ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 20ல் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்...!
ஆகஸ்ட் 20ல் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்...!

நீட் தேர்வு விவகாரத்தில் தொடரும் மாணவர்களின் மரணங்களுக்கு பாஜக அரசும், அதிமுகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியுமே காரணம் என்றும் நீட் தேர்விற்க்கான விலக்கு பெற தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுகிறார் என்றும் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகார போக்கில் உள்ள மத்திய அரசையும் இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க மதுரையில் அதே ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடும் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேடை அமைப்பது, பந்தல் அமைப்பது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இருபெறும் கட்சிகளின் மாநாடும், உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து கேள்விகள் எழுப்பட்டது. அப்போது பேசிய அவர், “அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் செய்தால் மாநாடு நடப்பது வெளியில் தெரியாமல் போய்விடுமா. மாநாட்டிற்கு 10 லட்சம் பேர், 40 ஆயிரம் வண்டிகள் வர இருக்கும் நிலையில் அதை பொறுக்க முடியவில்லை. உள்துறையிடம் முதலமைச்சர் கேட்டுள்ளார். 10 லட்சம் பேர், 40 ஆயிரம் என சொன்னதும் விழித்துக் கொண்டார். அதை தடுக்க வேண்டும் என மாநாடு நெருங்க நெருங்க நிர்பந்தம் கொடுப்பார்கள்.

நீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை. நீட் விவகாரத்தில் தந்தை மகன் உயிரிழந்தது என்பது சோகமான நிகழ்வு. உதயநிதி அங்கு சென்ற போது அவரை நிறுத்தி மாணவர்கள் கேள்வி கேட்டார்கள். இப்போது கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிறார். வெட்கமாக இல்லையா உங்களுக்கு, எத்தனை வருடம் உத்தரவு பிறப்பிக்கும் இடத்தில் இருந்தீர்கள். எமெர்ஜென்சியின் போது இந்திராகாந்தி மாற்றிவிட்டார். 17 வருடங்களாக ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது மாநிலப்பட்டியலுக்கு மாற்றி இருந்தால் இந்த நீட் தொல்லையே நமக்கு இருந்திருக்காதே” என்றார்.

அதே சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் சென்னையில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com