’தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் வேண்டாம்; அது குலத்தொழிலை ஊக்குவிக்கும்’ - ஆதித்தமிழர் பேரவை
சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு பணிநிரந்தரம் கோரியும், தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்தும் ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் தூய்மைபணியாளர்கள் போராடி வந்தனர். இதற்கிடையில் அரசுக்கும் தூய்மை பணியாளர் தரப்புக்கும் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனாலும், சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் 13-வது நாள் தொடர் போராட்டமானது ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் நடந்த கைது நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் பணி நிரந்தரம் என்பதை நிராகரித்த தமிழக அரசு, தூய்மை பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என 6 சிறப்பு திட்டங்களை அறிவித்தது.
தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் வேண்டாம்..
தூய்மை பணியாளர்களுக்கான பணி நிரந்தரம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், “குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து நீங்கள் குப்பையை மட்டுமே அள்ளுங்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. அவர்களின் தரம் உயர வேண்டும். இது தான் மாற்று சிந்தனை.
குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பை அல்ல வேண்டுமா? இந்த தலைமுறை அந்த தொழிலை செய்தால் அடுத்த தலைமுறை உயர வேண்டும் என்பது தானே சமூகநீதி” என்று பேசியிருந்தார்.
திருமாவளவனின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆதித்தமிழர் பேரவையின் தரப்பிலிருந்தும் அதே கோரிக்கையே வைக்கப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் பேரவை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும்.
பணிநிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும், என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம்.
தூய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது அதை வரவேற்கிறோம்.
சுயமரியாதையுடன் வாழ்வதற்கு குலத்தொழில் இருந்து வெளியேறுவது சரியானதாகும். பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.