நந்தனம்| அரசு கல்லூரி கேண்டினில் பணிபுரியும் இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை!
நந்தனம் அரசு கல்லூரி கேண்டினில் பணிபுரியும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேண்டின் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக் மற்றும் ஊழியர் குணசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தனம் அரசு கல்லூரியின் கேண்டினில் அரியலூரைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் கடந்த 20 நாட்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கேண்டினில் ஊழியராக பணியாற்றி வரும் குணசேகர் என்ற 56 வயது முதியவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நேற்று காவலாளியிடம் கூற, காவலாளி போலீஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு கவுன்சிலிங் அழைத்துச் சென்றுள்ளனர்.
3 பேர் கைது..
அப்போது இளம் பெண்ணை கேண்டின் உரிமையாளர் செல்வம் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும், இதனை பார்த்த குணசேகர் என்ற முதியவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் ,கேண்டின் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக் மற்றும் கேண்டீன் ஊழியர் குணசேகர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

